நாகையிலிருந்து மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கும் கப்பல் போக்குவரத்து தொடங்க வேண்டும் என்று வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சோழர்களின் ஆட்சிக் காலத்தில், தமிழகத்தின் முக்கியத் துறைமுக நகரமாக நாகை விளங்கியது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, நாகை துறைமுகம் முக்கிய ஏற்றுமதி, இறக்குமதி தளமாகவும் திகழ்ந்தது.
பன்னாட்டு சரக்குப் போக்குவரத்து மட்டுமின்றி, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்தும் மேற்கொள்ளப்பட்டது. அந்த காலக்கட்டத்தில், ரோனா, ரஜூலா, ஸ்டேட் ஆஃப் மெட்ராஸ் ஆகிய கப்பல்கள் நாகை துறைமுகத்துக்கு வந்து சென்றன. காலமாற்றத்தால் 1980-க்குப் பின்னர் இந்த கப்பல்கள் சேவையை நிறுத்தின.
மலேசியாவிலிருந்து நாகைக்குஇயக்கப்பட்டு வந்த எம்.வி.சிதம்பரம் என்ற கப்பலில் 1984-ல் தீ விபத்து நேரிட்டதால், அந்தப் கப்பலும் சேவையை நிறுத்திக் கொண்டது. 1991 செப்டம்பர் மாதம் நாகையிலிருந்து எம்.வி.டைபா என்றகப்பல் மூலம் வெங்காயம் ஏற்றுமதி செய்யப்பட்டதே கடைசி ஏற்றுமதியாக இருந்தது. 1999 முதல் நாகை துறைமுகம் வழியாக பாமாயில் மற்றும் தேங்காய் புண்ணாக்குஇறக்குமதி நடைபெற்றது. பிறகுபோதிய நடவடிக்கைகள் எடுக்கப்படாததால், நாகை துறைமுகம் செல்வாக்கை இழந்தது.
நாகை துறைமுகத்திலிருந்து மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்க வேண்டும் என்று தமிழகத்தைச் சேர்ந்த வணிகர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதற்கிடையே, அண்மையில் இந்தியா வந்த இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க, டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது, நாகை-இலங்கை காங்கேசன்துறை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவது என ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
நாகை-இலங்கை இடையே இயக்கப்படும் `செரியாபனி’என்ற கப்பல் கடந்த 7-ம் தேதி நாகை துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது. மறுநாள் சோதனை ஓட்டம் நடைபெற்றது. நாளை (அக்.12) முதல் பயணிகள் கப்பல்போக்குவரத்து தொடங்க உள்ளது.
இதுகுறித்து இந்திய வர்த்தக தொழில் குழும துணைத் தலைவர் என்.பி.எஸ்.பாலா கூறும்போது, “இந்த கப்பலை சரக்குகளைக் கையாளும் வகையில் இயக்கினால், ஏற்றுமதி, இறக்குமதிவர்த்தகம் பெருகும். இதனால் அந்நிய செலாவணி அதிக அளவில் கிடைக்கும். நாகை துறைமுகத்தில் கடல் வணிகமும், பொருளாதார வளர்ச்சியும் பெருகும்.மேலும், முன்பு இருந்ததுபோல சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கும் கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இதன் மூலம் கடல் வணிகமும் அதிகரிக்கும்” என்றார்.
NEWS EDITOR : RP