கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டியின் இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் ‘காந்தாரா’. 1800-களில் குறுநில ராஜா ஒருவர் பழங்குடிகளுக்கு வனப்பகுதியை ஒட்டிய நிலத்தை தானமாக வழங்குகிறார். ஆனால், அவருடைய சந்ததியினர் தங்களின் பூர்விக நிலத்தை பழங்குடியினரிடமிருந்து பறிக்க முயற்சிப்பதே இத்திரைப்படத்தின் கதை.
கன்னடத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து தமிழ், ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாகி மொத்தம் ரூ.400 கோடிக்கும் மேல் வசூலித்து பலரையும் ஆச்சரியப்படுத்தியது. சிறந்த படம் மற்றும் சிறந்த நடிகர் ஆகிய 2 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராகும் என ஹொம்பலே பிலிம்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது.இதற்காக, மங்களூருவில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. காந்தாரா முதல் பாகம் ரூ.16 கோடியில் தயாரிக்கப்பட்ட நிலையில், இரண்டாம் பாகம் பிரமாண்டமாக தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், காந்தாரா படத்தில் காட்சிப்படுத்தப்பட்ட காலத்துக்கு முன் நடக்கும் கதையாக உருவாகும் காந்தாரா – 2 படத்தின் படப்பிடிப்பு வருகிற நவம்பர் 1 ஆம் தேதி துவங்க உள்ளதாகவும் படத்தின் பட்ஜெட் ரூ.125 கோடி என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
NEWS EDITOR : RP