பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. இதையடுத்து, அரசு ஊழியர்களின் சம்பளம் குறைப்பு, வெளிநாட்டு தூதரகங்களின் எண்ணிக்கை குறைப்பு, உளவு அமைப்புகளுக்கான நிதி குறைப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில், அண்மையில் சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) பாகிஸ்தானுக்கு கடன் வழங்கி உள்ளது. சீனா உள்ளிட்ட நட்பு நாடுகளும் பாகிஸ்தானுக்கு உதவ முன்வந்துள்ளன.
இந்நிலையில் இஸ்லாமாபாதிலுள்ள கானேவால் மாதிரி வேளாண் பண்ணை தொடக்க விழாவில் பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனீர் பேசியதாவது
பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் பெருமையும், ஆர்வமும், திறமையும் ஒருங்கே பெற்றவர்கள். நமது நாட்டு பொருளாதாரச் சிக்கலைத் தீர்க்க வெளிநாடுகளிடம் கையேந்துவதை நாம் முதலில் கைவிடவேண்டும்.
வெளிநாட்டுக் கடனைச் சார்ந்திருப்பதை முடிவுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக நமது நாட்டை தன்னிறைவு பெறச் செய்ய வேண்டும்.பாகிஸ்தான் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து ஆசிகளையும் சர்வ வல்லமை படைத்த அல்லா நமக்கு வழங்கியுள்ளார். உலகின் எந்த சக்தியாலும் நம் நாட்டின் முன்னேற்றத்தைத் தடுக்க முடியாது.நமது நாடு விவசாயப் புரட்சியை ஏற்படுத்தும். சிறு விவசாயிகள் பயன்பெறவும், பசுமைப் பண்ணை முயற்சிகளின் நோக்கத்தை பரப்பவும் நவீன தரத்திற்கு ஏற்ப மாதிரி பண்ணைகள் நாடு முழுவதும் நிறுவப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
பாதுகாப்பும் பொருளாதாரமும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டவை மற்றும் இன்றியமையாதவை. நமது நாட்டுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியில் இருந்து வெளியேறும் வரை நமது ராணுவம் ஓயப்போவதில்லை.
NEWS EDITOR : RP