கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு நிலக்கரி 2வது சுரங்க விரிவாக்க பணிகளுக்காக சேத்தியாத்தோப்பு அருகே உள்ள கத்தாழை, கரிவெட்டி ,வளையமாதேவி உள்ளிட்ட பகுதிகளில் 25 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு வருவதாக தகவல் வெளியானது.
அதன்படி 2006 ஆம் ஆண்டு கையகப்படுத்தப்பட்ட நிலங்களை கடந்த மார்ச் மாதம் 10-ஆம் தேதி அன்று வளையமாதேவி கிராமத்தில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் பலத்த காவல்துறை பாதுகாப்புடன் இன்று என்எல்சி நிறுவனம், இயந்திரங்களைக் கொண்டு நிலங்களை சமன்படுத்தியது. இதனையடுத்து இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தப்பகுதி விவசாயிகளும், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சிகளும் போராட்டத்தில் இறங்கினர்.
குறிப்பாக இவளையமாதேவி கிராமத்தில் நிலத்தை சமன் செய்யும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து, பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த காவல்துறையினரிடம் பாமகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனையடுத்து வளையமாதேவி மெயின்ரோடு பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டு போராட்டம் நடத்த முயன்ற பாமகவினர், பொதுமக்கள் உள்ளிட்ட சுமார் 50 க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து நிலம் கையகபப்டுத்தும் பணி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், மீண்டும் இன்று காலை சேத்தியாதோப்பு அருகே வளையமாதேவியில் நடவு செய்யப்பட்ட வயலில் சுரங்கத்திற்காக வாய்க்கால் மற்றும் கால்வாய் வெட்டும் பணி தொடங்கியது. இதற்காக 30-க்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு பணிகள் நடைபெற்றது. கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், விழுப்புரம் சரக டி.ஐ.ஜி தலைமையில் 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் சேத்தியாதோப்பு, வளையமாதேவி பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இன்னும் 2 மாதத்திற்குள் நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் அறுவடை செய்யவுள்ள நிலையில், நெற்பயிர்கள் அழிக்கப்பட்டு கால்வாய் மற்றும் வாய்க்கால் அமைக்கும் பணி தொடங்கி உள்ளதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பேராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பதற்றம் நிலவி வருகிறது. மேலும் இவர்களுக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்ட பாமகவினரை போலீசார் கைது செய்தனர்.
NEWS EDITOR : RP