ஆன்லைன் விளையாட்டுகளால் பணத்தை பறிகொடுத்த பலர் தற்கொலை செய்து கொண்டதால், தமிழக அரசு ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்து சட்டம் கொண்டு வந்தது. இதை எதிர்த்து ஆன்லைன் நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில் மூத்தவழக்கறிஞர் முகுல் ரோஹ்தகி ஆஜராகிவாதிடுகையில், ‘‘சூதாட்ட விளையாட்டுகளுக்கு எதிராக சட்டம் இயற்ற மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்றாலும், ரம்மி விளையாட்டை திறமைக்கான விளையாட்டாக உச்ச நீதிமன்றமே தெளிவுபடுத்தியுள்ளது.
ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்துவதாகக்கூறி தமிழக அரசு ஆன்லைன் ரம்மியை அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டு எனக்கூறி அதற்கு தடை விதித்துள்ளது. அது ஒன்றும் அதிர்ஷ்ட விளையாட்டு அல்ல. எனவே, தடை விதித்து சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் கிடையாது. அந்த சட்டமும் செல்லாது’’ என்றார்.
மற்றொரு மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, ‘‘திறமைக்கான விளையாட்டுகளில் அதிர்ஷ்டத்துக்கான வாயப்புகள் இருந்தாலும் அந்த விளையாட்டை அதிர்ஷ்டத்துக்கான விளையாட்டாக கூற முடியாது. சதுரங்கம்போல ரம்மியும் திறமைக்கான விளையாட்டே’’ என்றார்.
இந்த வழக்கில் வாதங்கள் நிறைவடையாததால், வழக்கின் விசாரணையை வரும் ஜூலை 19-ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார்.
மற்றொரு மூத்த வழக்கறிஞர் சி.ஆர்யமா சுந்தரம், ‘‘இருவர் நேரில் விளையாடி ரூ. 10 வென்றால் அது சட்டப்பூர்வமானது. அதுவே ஆன்லைனில் விளையாடினால் அது சட்டவிரோதமா என கேள்வி எழுப்பினார்.
NEWS EDITOR : RP