சிறையில் இருக்கும் ‘நர்கிஸ் முகம்மதிக்கு’ அமைதிக்கான நோபல் பரிசு..!! யார் இந்த நர்கிஸ்..??!

Spread the love

ர்கிஸ் முகம்மதி சிறு பிள்ளையாக இருந்தபோது அவரது தாய் அவரிடம் இவ்வாறாகச் சொல்லியுள்ளார். “மகளே, நீ ஒருபோதும் அரசியல் பழகாதே. ஈரானைப் போன்ற அரசியலமைப்பு கொண்ட நாட்டில் அமைப்புகளுக்கு எதிராகப் போராடினால் மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்”. இவ்வாறு நர்கிஸின் தாய் சொன்னது தீர்க்க தரிசன வார்த்தைகள் போன்று பலித்தேவிட்டது. ஈரான் அரசியல் அமைப்பை எதிர்த்து அரசுக்கு எதிராக நர்கிஸ் கொடுத்த குரல் அவரை சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தள்ளியுள்ளது.

நர்கிஸ் ஒரு பொறியியல் நிபுணர். ஆனால் அவர் வேலை பறிபோனது. குழந்தைகள், குடும்பம் பறிபோனது. அவரது கணவர் ஏற்கெனவே ஈரான் அரசால் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவர். அவர் தற்போது பிரான்ஸ் நாட்டில் தஞ்சம் புகுந்து இரண்டு குழந்தைகளுடன் வசிக்கிறார். நர்கிஸ் தனது 16 வயது இரட்டைக் குழந்தைகளின் குரலைக் கேட்டே ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது. அவர் அவருடைய மகனையும், மகளையும் ஆரத்தழுவி 8 ஆண்டுகள் ஓடிவிட்டன. நர்கிஸ் இன்று நேற்றல்ல 30 ஆண்டுகளாக ஈரான் அரசுக்கு எதிராக எழுதியிருக்கிறார். களத்தில் போராடி இருக்கிறார்.

ஈரான் நாட்டின் வடக்குப் பகுதியில் தலைநகர் தெஹ்ரானில் உள்ள சிறைச்சாலையில் தான் நர்கிஸ் தற்போது இருக்கிறார். கடந்த ஏப்ரல் மாதம் அவர் அங்கிருந்தவாறே தொலைபேசி மூலம் அயல்நாட்டு ஊடகத்துக்குப் பேட்டி அளித்தார். அதில் அவர், “என் அறையின் சாளரத்தின் முன்னால் நான் ஒவ்வொரு நாளும் அமர்கிறேன். அதன் வழியாக வெளியே தெரியும் மலைகளைப் பார்க்கிறேன். அதில் இருக்கும் பசுமை புல்வெளியைப் பார்க்கிறேன். அதைப் பார்த்தவாரே சுதந்திர ஈரானுக்கான கனவைக் காண்கிறேன்.

என்னை அவர்கள் எவ்வளவு அதிகமாகத் தண்டிக்கிறார்களோ, என்னிடமிருந்து எத்தனை எத்தனை உரிமைகளைப் பறிக்கிறார்களோ அந்த அளவுக்கு எனது போராட்டம் வலிமை பெறுகிறது. ஜனநாயகமும், சுதந்திரமும் பெற வேண்டும் என்ற போராட்ட குணம் வலுப்பெறுகிறது” என்று கூறினார். அவருடைய அந்தப் பேட்டி சிறையைத் தாண்டி பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

நர்கிஸ் முகம்மதி ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்தான். அவருடைய தந்தை ஒரு சமையலர் மற்றும் விவசாயி. தாயின் குடும்பத்துக்கு அரசியல் பின்னணி இருந்துள்ளது. 1979-ல் ஈரானில் ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் அங்கே மன்னராட்சி அப்புறப்படுத்தப்பட்டது. அப்போது நர்கிஸின் தாய்வழி மாமன் ஒருவரும் இன்னும் இரண்டு உறவினர்களும் கைது செய்யப்பட்டனர். உரிமைகளுக்காக குரல் கொடுத்ததற்காகவே அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதுதான் அவரின் போராட்டக் குணத்தின் முதல் விதையானது. ஒவ்வொரு வார இறுதியிலும் நர்கிஸ் தனது தாய் சிறையில் உள்ள சகோதரனைப் பார்க்க பழங்களை எடுத்துக் கொண்டு போவதும், தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னால் உட்கார்ந்து ஈரான் அரசு வெளியிடும் மரண தண்டனைப் பட்டியலை பதற்றத்துடன் பார்ப்பதும் அவர் மனதில் ஆழமாகப் பதிந்தது.

ஒருநாள் மதிய வேளையில் நர்கிஸின் தாய் டிவியைப் பார்த்து ஓலமிட்டார். திரையில் தன் தாய்மாமனின் படமும், பெயரும் மரண தண்டனை அறிவிக்கப்பட்டவர்கள் பட்டியலில் இருந்துள்ளது. 9 வயதே ஆகியிருந்த நர்கிஸ் மனதில் அந்த மரண ஓலம் பேரலையை உண்டாக்கியது. அன்று தொடங்கியது அவரது மரண தண்டனை எதிர்ப்பு குணம். அதைப் பார்த்த நர்கிஸின் தாய், “மகளே, நீ ஒருபோதும் அரசியல் பழகாதே. ஈரானைப் போன்ற அரசியலமைப்பு கொண்ட நாட்டில் அமைப்புகளுக்கு எதிராகப் போராடினால் மிகப் பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்” என்று கூறினார். ஆனால், மரண தண்டனை கூடாது, மனித உரிமைகள் பேணப்பட வேண்டும், ஈரான் ஜனநாயக நாடாக உருவாக வேண்டும் என்ற குரல்களோடு வேலையை தொலைத்து, கணவர், குழந்தைகளைப் பிரிந்து சிறை சாளரத்தின் ஊடே கனவு கண்டு கொண்டிருக்கிறார். நர்கிஸை உரிமைக் குரலைப் பிரதிபலித்த Women, Life, Freedom கோஷம். ஈரானில் 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயம். பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க ‘காஸ்த் எர்ஷாத்’ என்ற சிறப்புப் பிரிவு போலீஸார் பொது இடங்களில் ரோந்தில் ஈடுபடுவர். கடந்த செப்டம்பர் மாதம் 13-ம் தேதி ஈரானின் குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரை சேர்ந்த மாஷா அமினி (22) என்பவர் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க குடும்பத்துடன் சென்றார். அப்போது சிறப்புப் படை போலீஸார், மாஷாவை வழிமறித்து அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம்சாட்டினர். அவரை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். போலீஸ் காவலில் இருந்த அவர் கடந்த செப்டம்பர் 16-ம் தேதி உயிரிழந்தார்.

NEWS EDITOR : RP

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram