தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து ஊக்கத்தொகை வழங்கினார். இதற்கான நிகழ்ச்சி நீலாங்கரையில் ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது.
இந்த விழாவில் சுமார் 1500 மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். அதேசமயம் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் கல்வி பயின்று அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளுக்கும் நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்கு வெள்ளை சட்டையில் வந்த விஜய்யை கண்ட அனைவரும் அரங்கம அதிர கூச்சலிட்டு அவரை வரவேற்றனர். இந்த விழாவில் பேசிய நடிகர் விஜய் பேசியதாவது:
இதுவரை பல நிகழ்ச்சிகளில் பேசியிருக்கிறேன். ஆனால் முதல்முறையாக இதுபோன்ற கல்வி நிகழ்ச்சியில் பேசுகிறேன். ஒரு பொறுப்புணர்ச்சி வந்ததைப் போல உணருகிறேன். நான் பள்ளியில் ஒரு சாதாரண மாணவன் தான். வருங்கால இந்தியாவின் இளம் நம்பிக்கை நட்சத்திரங்களை பார்க்கும்போது என் பள்ளி காலங்களை நினைவுக்கு வருகிறது.
சமீபத்தில் ஒரு படத்தின் வசனம் என்னை மிகவும் பாதித்தது. ‘காடு வச்சிருந்தா எடுத்துக்குவானுங்க, காசு வச்சிருந்தா புடுங்கிக்குவானுங்க, ஆனா படிப்ப மட்டும் யாரும் எடுக்க முடியாது’ என்று வசனம் வரும். கல்விக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நீண்ட நாள்களாக என் மனதில் இருந்து வந்தது. அது இன்று நிறைவேறியிருக்கிறது.”
NEWS EDITOR : RP