புதுச்சேரியில் அனைத்து பள்ளிகளும் மாதத்தின் கடைசி வேலை நாளில் புத்தக பை இல்லாத தினமாக கடைபிடிக்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது. அன்றைய தினம் பள்ளிகளுக்கு வரும் மாணவர்கள் புத்தகப்பை கொண்டு வர வேண்டாம்.
மேலும், அன்றைய தினம் பள்ளிகளில் கைவினை, வினாடி வினா, விளையாட்டு போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் மாதத்தின் கடைசி நாள் விடுமுறை தினமாக இருக்கும் பட்சத்தில் முந்தைய வேலை நாளை புத்தக பையில்லா தினமாக பின்பற்ற அரசு உத்தரவிட்டிருந்தது.
இதனால் இன்றைய தினம் மாணவர்கள் புத்தகப்பை இன்றி பள்ளிகளுக்கு சென்றனர். பள்ளிகளிலும் மாணவர்களுக்கு கைவினை பொருட்கள் செய்தல், விளையாட்டு, கலை நிகழ்ச்சி, வினாடி வினா, விவாத நிகழ்வு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஜூலை மாதத்தின் கடைசி வேலை நாளான இன்று (திங்கட்கிழமை) புதுச்சேரியில் உள்ள அனைத்து பிராந்திய அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் புத்தகப்பை இன்றி பள்ளிக்கு வருமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
NEWS EDITOR : RP