மதுரை ரயில் நிலையத்தில் இனி கட்டணம் செலுத்தி திருமண ஜோடிகள் போட்டோ ஷூட் நடத்திக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ரயில்வே துறையின், வருவாய் பிரிவு சார்பில் பல்வேறு நிலையங்களில் வருவாயை பெருக்குவதற்கு பல முயற்சிகள் மேற்கொள்ளபட்டு வருகின்றன. அந்த வகையில், உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்க ரயில் நிலையங்களில் இலவசமாக விற்பனை செய்ய “ஒரு நிலையம் ஒரு பொருள்” திட்டம், ரயில் பெட்டிகளில் விளம்பரம் செய்வது, ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் வாகனங்களுக்கு கட்டண நிர்ணயம் உள்ளிட்ட பல்வேறு விதத்தில் வருமானத்தை ஈட்டி வருகிறது.
குறிப்பாக ரயில் நிலையங்களில் திரைப்பட படப்பிடிப்புகளுக்கு பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு, அனுமதிக்கப்பட்டு வருகிறது.
இரு மனங்கள் இணையும் திருமணம் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் முக்கிய தருணமாகும். அப்படிப்பட்ட திருமண நிகழ்வு காலத்திற்கும் நம் மனதில் நினைவுகளாக இருப்பதற்கு முக்கிய சாட்சியாக இருப்பது புகைப்படங்கள் மட்டுமே. அதிலும் திருமணத்திற்கு முன்பு, திருமணத்திற்கு பின்பு என மணமக்கள் விதவிதமாக போட்டோஷூட் எடுப்பது தற்போது டிரெண்டாகி வருகிறது.
சிலர் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளிலும், சிலர் மலை உச்சிகளிலும் போட்டோ ஷூட் நடத்துவது வழக்கம். இதில் சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகும். அதேபோல், சில புகைப்படங்கள் கடுமையான விமர்சனங்களையும் பெறுகிறது. அவ்வாறு போட்டோ ஷூட்டில் ஆர்வமுள்ள நபர்களுக்காக ஒரு புதுமையான இடம் கிடைத்துள்ளது. தற்போது, ரயில் நிலையங்களில் புதுமண தம்பதிகள் போட்டோ ஷூட் நடத்திக் கொள்ள தெற்கு ரயில்வே அனுமதி வழங்கி உள்ளது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தும் வகையில் தெற்கு ரயில்வே சார்பில் கடந்த ஆண்டு வெட்டிங் சூட் அல்லது விளம்பரதாரர்கள் புகைப்படங்கள் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு, கட்டண நிர்ணயம் செய்யப்பட்டு ஆணை வெளியிடப்பட்டது
இதன்படி, மதுரை ரயில் நிலையத்தில் திருமண ஜோடிகள் புகைப்படம் எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்தில் புதுமணத் தம்பதி ரூபாய் 5000 கட்டணம் செலுத்தி புகைப்படங்கள் எடுத்துக் கொள்ளலாம். ரயில் பெட்டி பின்புலம் வேண்டுமென்றால் கூடுதல் கட்டணம் ரூபாய் 1500 செலுத்த வேண்டும். மற்ற ரயில் நிலையங்களுக்கான கட்டணம் ரூபாய் 3000 (ரயில் பெட்டிக்கு கூடுதலாக ரூபாய் 1000) என மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
NEWS EDITOR : RP