கிழக்கு லடாக்கில் கடந்த 2020-ம் ஆண்டு இந்தியா-சீனா படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, இரு நாடுகளும் ராணுவ ரீதியாகவும், தூதரக ரீதியாகவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதில் உடன்பாடு ஏற்பட்டு, பெரும்பாலான பகுதிகளில் இருந்து இருநாட்டு படைகளும் வாபஸ் பெறப்பட்டு விட்டன. இன்னும் சில பகுதிகளில் இருந்து படைகள் வெளியேற வேண்டி உள்ளன.
அதற்கான பேச்சுவார்த்தை நடவடிக்கைகள் ஒருபுறம் நடந்து வருகின்றன. எனினும், எல்லையில் படைகள் குவிக்கப்பட்டு இருப்பது தொடர்ந்து பதற்ற நிலையையே நீடிக்க செய்கிறது.
இந்த நிலையில், கிழக்கு லடாக் பிரிவில் பாதுகாப்பு மற்றும் ரோந்து உள்ளிட்ட எல்லை காவல் பணிகளுக்காக, இந்திய ராணுவத்தின் ஆயுதங்கள் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளன. இதன்படி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஹவிட்சர் ரக பீரங்கிகள், உடனடி பதில் தாக்குதல் நடத்தும் எம்4 ரக வாகனங்கள், அனைத்து தரை பகுதிகளிலும் சென்று தாக்க கூடிய வாகனங்கள் ஆகியவை சேர்க்கப்பட்டு உள்ளன.
இதுபற்றி கேப்டன் வி. மிஷ்ரா கூறும்போது, ஹவிட்சர் ரக பீரங்கிகள் ஜபல்பூர் நகரில் உள்ள தொழிற்சாலையில் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டது. கடந்த ஆண்டில் இருந்து இந்த பகுதியில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளது.
கடல் மட்டத்தில் இருந்து 4 ஆயிரம் மீட்டர் உயரத்தில் உள்ள பொருட்களை இலக்காக கொண்டு தாக்கும் திறனும், 48 கி.மீ. தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமுடன் தாக்க கூடிய திறனும் பெற்றது. 6 வகையான வெடிபொருட்களை கொண்டுள்ளதுடன், முதலில் சுடும்போது, 3 சுற்றுகள் வரை குண்டுகளை வெளியேற்ற கூடியது. இது, போபர்ஸ் தொழில் நுட்பத்தின் பரிமாற்றம் ஆகும். ஆனால், மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இதனை இந்தியா தயாரித்து உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
NEWS EDITOR : RP