Today

கல்வியில் சிறந்த மாநிலமான தமிழ்நாட்டை முடக்கவே நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

Spread the love

விடுதலைக் கனல் தெறித்த ஊர் இந்த வேலூர். 1806-ஆம் ஆண்டு, ஜூலை 10-ஆம் நாள் வேலூர் கோட்டையில் நிகழ்ந்த புரட்சியின் தொடக்கம்தான் இந்தியர்கள் இனியும் அடிமையாக வாழத் தயாராக இல்லை என்பதை பிரிட்டிஷ் ஆட்சிக்கு உணர்த்தியது. அத்தகைய வீரம் விளைந்த ஊரில் இந்த ஆண்டுக்கான திமுக முப்பெரும் விழாவை நடத்துவது மிகமிக பொருத்தமானது.

இந்த வேலூர் கோட்டை முதல் – குமரிக் கடல் வரைக்கும் இந்தக் திமுகவை கட்டி ஆள்பவர்கள் தொண்டர்கள்தான். இந்த இயக்கத்தை நீங்களும், உங்கள் குடும்பமும் சேர்ந்துதான் வாழ வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அதனால்தான் நாம் கம்பீரத்தோடு இன்றைக்கு பவள விழா கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்த ஆண்டுக்கான பெரியார் விருது – கி.சத்தியசீலன், அண்ணா விருது- முன்னாள் அமைச்சர் சுந்தரம், கலைஞர் விருது – துணைப் பொதுச் செயலாளர், அமைச்சர் ஐ. பெரியசாமி, பேராசிரியர் விருது – ந.ராமசாமி, பாவேந்தர் விருது – மலிகா கதிரவனுக்கும் வழங்கப்படுகிறது. விருதுகள் பெற்றுள்ள ஐந்து பேருக்கும் வாழ்த்துகள், பாராட்டுகள்.

75 ஆண்டுகளாக தமிழ்ச் சமுதாயத்தின் காவல் அரணாக கழகம் செயல்பட்டு வருகிறது. 1971, 1989, 1996, 2006, 2021-என்று மொத்தம் ஆறு பொதுத்தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து வருகிறோம். ஒரு பக்கம் ஆட்சி – இன்னொரு பக்கம் கட்சி இரண்டின் மூலமாகவும் தமிழ்நாட்டை மற்ற மாநிலங்களைவிட தலைசிறந்த மாநிலமாக மாற்றிக்கொண்டு வருகிறோம். இன்றைக்கு தமிழ்நாட்டின் வளர்ச்சி – தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சி – தமிழினத்தின் வளர்ச்சி – பலருக்கும் பொறாமை ஏற்படுத்தும் வளர்ச்சியாக இருக்கிறது.

தமிழ்நாடு என்ற மாநிலத்தை – அதற்கான உரிமைகளை சிதைப்பது மூலமாக, நம்முடைய மாநில மக்களின் வாழ்க்கையை அழிக்கப் பார்க்கிறார்கள். அதைத்தான் பட்டவர்த்தனமாக பாஜக செய்துகொண்டு வருகிறது. ஜி.எஸ்.டி. மூலமாக மாநில உரிமையை பறித்தார்கள். ஒரு மாநில அரசை நடத்துவதற்கு மிக முக்கியமான நிதி ஆதாரம் என்பது வரி வருவாய்தான். அந்த வரி வருவாயைக் கபளீகரம் செய்ததன் மூலமாக மாநில அரசை செயல்பட விடாமல் முடக்குகிறார்கள். அப்படிப்பட்ட நிதி ஆதாரங்களை கிடைக்கவிடாமல் செய்வதற்காகவே ஜி.எஸ்.டி.யை கொண்டு வந்து நிதி வருவாய் வாசல்களை அடைத்தார்கள்.

அதேபோல புதிய கல்விக் கொள்கை என்று சொல்லி, பொதுவான கல்வி முறை என்ற பெயரில், நமது மாநிலத்தின் கல்வி வளர்ச்சியை தடுக்கப் பார்க்கிறார்கள். கல்வியில் சிறந்த மாநிலமான தமிழ்நாட்டை முடக்குவதற்கான முயற்சிதான் அவர்கள் கொண்டு வரும் கல்விக் கொள்கை. மருத்துவம் படிக்க நினைக்கும் மாணவர்களின் கனவைச் சிதைப்பதற்காக கொண்டுவரப்பட்டதுதான் நீட் தேர்வு. லட்சக்கணக்கில் செலவு செய்தால்தான் தேர்ச்சி பெற முடியும் என்ற நிலையை உருவாக்கிவிட்டார்கள். சில தனியார் கோச்சிங் செண்டர்களின் லாபத்துக்காகவே இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.

அனிதா முதல் ஜெகதீஸ்வரன் வரை ஏராளமான மாணவர்கள் நீட் தேர்வால் உயிரிழந்திருக்கிறார்கள். இத்தகைய உயிரிழப்புகள் இப்போது வட மாநிலங்களிலும் நடக்க ஆரம்பித்திருக்கிறது. கடந்த 14-ஆம் தேதி ஜார்கண்டைச் சேர்ந்த மாணவி, ராஜஸ்தானில் தற்கொலை செய்துகொண்டார். நீட் தேர்வுக்கு படிப்பதற்காக வந்தவர் அவர். ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் கடந்த ஆண்டு, 22 மாணவர்கள் தற்கொலை செய்திருக்கிறார்கள். இத்தனை தற்கொலைகள் நடக்கிறதே, இதற்கான காரணத்தை மத்திய பாஜக அரசு ஆராய்ந்ததா? இரக்கமற்ற அரசாகத்தானே மோடி அரசு இருக்கிறது.

ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் எத்தனை வாக்குறுதி கொடுத்தார்கள்? நிறைவேற்றினார்களா? தமிழ்நாட்டுக்கு வந்து பல வாக்குறுதிகளை கொடுத்தார். அந்த வாக்குறுதிகளையாவது நிறைவேற்றினாரா? இல்லை. மதுரையில எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்போம் என்று 2015-ஆம் ஆண்டு சொன்னார்கள். இப்போதுதான் டெண்டரே விட்டிருக்கிறார்கள். இவை அனைத்தையும் யாரும் நினைவுபடுத்திவிடக் கூடாது என்றுதான் மற்ற பிரச்னைகளைக் கிளப்பிக் குளிர்காயப் பார்க்கிறார்கள்.

2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வரும்போது சமையல் சிலிண்டர் விலை ரூ.420 . இதை ரூ.1100-க்கு உயர்த்தியதுதான் மோடியின் சாதனை. மூன்று மடங்கு உயர்த்தினார்கள். தேர்தல் வருவதால் கண்துடைப்பு நாடகமாக இப்போது ரூ.200 மட்டும் குறைத்திருக்கிறார்கள். இதை மக்கள் நம்புவார்களா? 2014-ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வரும்போது பெட்ரோல் ஒரு லிட்டர் ரூ.71. இப்போது ஒரு லிட்டர் ரூ.102. மத்திய அரசின் வரியை மூன்று மடங்கு உயர்த்தி இருக்கிறார்கள். மோடி ஆட்சிக்கு வரும்போது டீசல் ஒரு லிட்டர் ரூ.55. இப்போது ஒரு லிட்டர் ரூ.94. மத்திய அரசின் வரியை ஏழு மடங்கு உயர்த்தி இருக்கிறார்கள்.

கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் ரூ.100 லட்சம் கோடி கடன் வாங்கி இருக்கிறது பாஜக அரசு. இவர்கள் ஆட்சிக்கு வரும்போது இந்தியாவுக்கு இருந்த கடன் 55 லட்சம் கோடி ரூபாய்தான். அது, இந்த 9 ஆண்டுகாலத்தில் ரூ.155 லட்சம் கோடி ஆகிவிட்டது. பெரிய நிறுவனங்களுக்கு ரூ.14 லட்சம் கோடி பணத்தை வாராக் கடன் என்று சொல்லி தள்ளுபடி செய்திருக்கிறது பாஜக அரசு. பணவீக்கம் அதிகமாகி இருக்கிறது. இப்படி வேதனையை மட்டுமே மக்களுக்குத் தந்த பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்.

இத்தகைய பொற்காலத்தை உருவாக்கித் தரத்தான் நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகிறது. இந்தியாவைக் காக்க இந்தியா கூட்டணியை வெல்ல வைக்க வேண்டியது நம்முடைய அரசியல் கடமை மட்டுமல்ல! கொள்கைக் கடமையும்தான்! நாடாளுமன்றத் தேர்தலில் 40-க்கு 40 இடங்களையும் வெற்றி பெற்றே தீருவோம்.

திமுக பவள விழா ஆண்டில் நாம் எடுத்துக்கொள்ள வேண்டிய உறுதிமொழி என்பது இந்திய நாடாளுமன்றத்தில் ஆட்சி அதிகாரத்தை செலுத்தும் கூட்டணிக் கட்சியாக நம்முடைய இயக்கத்தை உயர்த்துவோம் என்பதுதான். நாற்பதுக்கு நாற்பது வெல்வோம்! இந்தியாவைக் காப்போம்! இந்தியா கூட்டணி வெற்றிக்கு முழுமையாகப் பாடுபடுவோம்! என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், நமது கூட்டணிதான் புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் வெற்றி பெறப்போகிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை. அதில் சந்தேகமே இல்லை. தமிழ்நாட்டில் மட்டும் நாம் வெற்றி பெற்றால் போதாது. இந்தியா முழுமைக்கும் வெற்றி பெற்றாக வேண்டும். அதனால்தான் இந்தியா கூட்டணியை உருவாக்கி இருக்கிறோம். நம்முடைய ஆட்சி மத்தியில் அமைந்தால் 15 மாதத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையைக் கட்டி எழுப்ப முடியுமா? முடியாதா? நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியுமா? முடியாதா?

தமிழ்நாட்டுக்குத் தேவையான ரயில்வே திட்டங்களை ஏராளமாகக் கொண்டு வர நம்மால் முடியும். புதிய விமான நிலையங்கள் – மெட்ரோ ரயில்களை இயக்க முடியும். இவை எல்லாமே நம்முடைய இந்தியா கூட்டணி ஆட்சி அமையுமானால் தமிழ்நாட்டுக்கு கொண்டு வர முடியும். இந்தியா முழுமைக்கும் சமூகநீதியை உருவாக்கித் தர நம்மால் முடியும். இங்கு நாம் அமல்படுத்தி வரும் திராவிட மாடல் திட்டங்களை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்குக் கொண்டு சேர்க்க முடியும்.

NEWS EDITOR : RP

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram