மதுரை கோச்சடை பகுதியில் பழுதடைந்த நிலையில் இருந்த மின்கம்பத்தை மின்வாரிய ஊழியர்கள் கிரேன் உதவியுடன் சீரமைத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென கிரேனில் இருந்து கழன்று விழுந்த மின்மாற்றி அந்த வழியாக நடந்து சென்ற தேசிய ஜூடோ வீரர் விக்னேஸ்வரனின் இடது காலில் விழுந்தது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் உடனடியாக ஆம்புலன்சில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தேசிய ஜூடோ வீரர் விக்னேஸ்வரன் வருகிற 5, 6 ஆகிய தேதிகளில் தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விபத்தால் தனது எதிர்காலமே கேள்விக்குறியாகிவிட்டது என்று கூறியுள்ள தேசிய ஜூடோ வீரர் விக்னேஸ்வரன், தமிழக அரசு தனக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் அல்லது வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் கவனக்குறைவாக செயல்பட்ட கிரேன் ஆபரேட்டர்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது தாயார் எஸ் எஸ் காலனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
NEWS EDITOR : RP