அர்ஜுனும் (ஜெயம் ரவி), ஆண்ட்ரூவும் (நரேன்) உதவி ஆணையர்களாக காவல் துறையில் பணியாற்றி வருகின்றனர். விதிகளை மதிக்காமல் என்கவுன்டர் செய்யும் முன்கோபம் கொண்ட அர்ஜுன் அதிகாரிகளால் எச்சரிக்கப்படுகிறார். தன் நெருங்கிய நண்பன் எது செய்தாலும் அவருக்கு ஆதரவாக எப்போதும் துணை நிற்கிறார் ஆன்ட்ரூ. பெண்களை கடத்தி கொடூரமான முறையில் கொலை செய்யும் சைக்கோ கொலைகாரனை கண்டுபிடிக்கும் பொருட்டு இவர்கள் இருவரின் தலைமையில் தனிப்படை ஒன்று அமைக்கப்படுகிறது.
இதில் குற்றவாளியை பிடிக்கச் செல்லும்போது விபரீதம் நேரிட, சைக்கோ கில்லர் கைது செய்யப்படுகிறார். அந்த ஒரு சம்பவத்துக்குப் பிறகு காவல் துறைக்கு முழுக்குப் போட்டு ஒதுங்கி வாழ்கிறார் அர்ஜுன். ஆனால் சிறையிலிருந்து தப்பிக்கும் கொலைகாரன், அர்ஜுனை பழிவாங்க துரத்துகிறார். அதன்பின் சில பல கேள்விகளுக்கு விடை சொல்கிறது திரைக்கதை.ஆயிரத்து தொள்ளாயிரத்து இருபது தடவை எடுத்து பார்த்துப் பழகிய அதே, பெண்களைத் தேடி தேடி கொடூரமாக கொல்லும் சைக்கோ வில்லன்.
அவரைத் தேடி கண்டுபிடிக்கும் நாயகன். வேடிக்கை பார்க்கும் போலீஸ். வில்லனுக்கான பின் கதை. இதே டெம்ப்ளேட்டில் உருவாகியிருக்கும் மற்றொரு படம்தான் இயக்குநர் அஹமத்தின் ‘இறைவன்’. சைக்கோ த்ரில்லர் படங்களுக்கான அடிப்படை ஒன்லைன் இதுதான் என்றாலும், அதனைக் கொண்டு செல்லும் விதத்தில் படங்கள் தனித்து நிற்கின்றன.கதைக்குள் நுழைய நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும் படத்தின் முதல் 20 நிமிடங்களில் ஒரு காதல் பாடல், காதல் தோல்வி பாடல், அடுத்து இறப்பு பாடல்… இப்படியாக கதைக்கு எந்த வகையிலும் உறுதுணையில்லாத விஷயங்களைச் சுற்றி நகரும் படத்தின் தொடக்கம் பெரும் அயற்சி. காரணம் நயன்தாரா – ஜெயம் ரவி காதலுக்கும், நரேன் – ஜெயம் ரவி நட்புக்குமான அழுத்தமான காட்சிகள் இல்லாததால் எந்த எமோஷனல் உணர்வும் எடுபடவில்லை. வலிந்து திணிந்த காதலும், தேவையற்ற உணர்ச்சிகர வசனங்களும் தொடக்கத்திலேயே பிக்அப் ஆகாமல் திணறுகிறது.அடுத்து சைக்கோ த்ரில்லர் உலகில் நுழையும் திரைக்கதையின் மிகப்பெரிய பிரச்சினை சுவாரஸ்யமின்மை. போலீஸ் கைகட்டி வேடிக்கைப் பார்க்க, நாயகன் குற்றவாளியை எந்தவித பெரிய சிரமும் இல்லாமல் உடனுக்குடனே நெருங்கிவிடுவதும், எளிதில் கணிக்கக் கூடிய காட்சிகளும் விறுவிறுப்பை கூட்டாமல் ‘தேமே’வென கடக்கிறது. இடைவேளைக்கு முன்பு வரும் ட்விஸ்ட் கவனம் பெறுகிறது.
நியாயம் சேர்க்கும் காட்சிகள் இல்லாமல் வெறுமேனே சைக்கோ கொலைகாரனுக்கு ஹைப் கொடுப்பதும், நியாயம் கோரி வலியுறுத்தப்படும் ட்விட்டர் ஹேஷ்டேக்குகள் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருப்பதாக சொல்லியிருப்பதும், சைக்கோ கொலைகாரன் வெறும் பெண்களை மட்டுமே கடத்தி கொல்வது, அதற்கான காரணம் இல்லாததும், சைக்கோ த்ரில்லர் கதையும், கிறிஸ்துவ பின்னணியும் என ஆய்வுக் கட்டுரை எழுதும் அளவுக்கு குறிப்பிட்ட மதத்தை இப்படியான கதையுடன் தொடர்ந்து தொடர்புபடுத்துவதும் ஆபத்தான போக்கு.
மொத்தப் படத்தையும் ஒற்றை ஆளாக சுமந்து செல்லும் ஜெயம் ரவி அலட்டல் இல்லாத நடிப்பால் ஈர்க்கிறார். ‘எனக்கு பயம்னா என்னான்னே தெரியாது’ என்ற வசனத்துக்கேற்ற முகபாவனைகளையும் உணர்ச்சிகளையும் ஒரே போக்கில் நேர்த்தியாக வெளிப்படுத்தியிருக்கிறார். சில அழுகை காட்சிகளுக்கும், ஒரு தலைக்காதலுக்கும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வீணடிக்கப்பட்டுகிறார் நயன்தாரா.
நரேன் சிறிது நேரம் வந்தாலும் கொடுத்ததை சிறப்பாக செய்திருக்கிறார். ராகுல் போஸ் டெரர் லுக்கில் கொடூரத்தை வெளிப்படுத்துகிறார். தான் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்துக்கு நடிப்பால் உயிர்கொடுப்பதுடன், கடைசி 30 நிமிட ஓட்டத்துக்கு தனது உடல்மொழியால் பெரும் உதவிபுரிகிறார் வினோத் கிஷன். இவர்களைத் தவிர, விஜயலட்சுமி, சார்லி, ஆஷிஸ் வித்யாத்ரி, அழகம் பெருமாள், பக்ஸ் தேவையான பங்களிப்பை செலுத்தியுள்ளனர். யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை விறுவிறுப்பை கூட்ட உதவுகிறது. பாடல்கள் பெரிய அளவில் ஈர்க்கவில்லை. ஹரி.கே.வேதாந்த்தின் ஒளிப்பதிவு த்ரில்லருக்கான மனநிலையை உருவாக்கி கதைக்களத்துக்கு பெரும் பங்காற்றியிருக்கிறது. இரண்டு, மூன்று காட்சிகளில் ஒலிக்கலவை கவனிக்க வைக்கிறது. மணிகண்ட பாலாஜியின் படத்தொகுப்பில் இன்னும் கச்சிதம் தேவையோ என்ற உணர்வு எழுகிறது.
NEWS EDITOR : RP