சென்னை மணலியில் உள்ள எம்.எம்.டி.ஏ இரண்டாவது குறுக்கு தெருவில் உடையார் என்பவர் வசித்து வருகிறார். சோமாட்டோவில் பணியாற்றி வந்த இவர் சமீபத்தில் விபத்தில் சிக்கியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனால், அவரை மருத்துவமனையிலிருந்து கவனித்துக் கொள்வதற்காக உடையாரின் மனைவி உடன் இருக்கிறார். இந்த நிலையில், இரண்டு பெண் குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக உடையாரின் தாயார் சந்தான லட்சுமி சொந்த ஊரில் இருந்து மணலிக்கு வந்துள்ளார். நேற்று இரவு சந்தான லட்சுமி தனது பேத்திகளுடன் வீட்டில் உறங்கியுள்ளார். சந்தான லட்சுமியின் உறவினர் சிறுமியும் உடன் இருந்துள்ளார். வீட்டில் நேற்று இரவு 4 பேரும் தூங்கிய நிலையில், இன்று அதிகாலை ஜன்னலிலிருந்து குபு குபுவென புகை வெளியேறியுள்ளது.
இதைக்கண்ட அக்கம் பக்கத்தினர், பயந்து போய் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர். உடனே தீ அணைப்புத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்து வந்த தீ அணைப்பு துறையினர் வீட்டை திறந்து பார்த்த போது, கொசு விரட்டி உருகி அட்டைப்பெட்டியில் விழுந்து தீ பிடித்துள்ளது. இதனால், அந்த அறை முழுவதும் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளது. புகை மூட்டத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 3 சிறுமிகள் உள்பட 4 பேரும் உயிரிழந்து இருக்கலாம் என முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.
NEWS EDITOR : RP