பூந்தமல்லியில் இருந்து தியாகராய நகர் வரை செல்லும் மாநகர பஸ் (தடம் எண் 154) பூந்தமல்லியில் இருந்து பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாரிவாக்கம் சாலை சந்திப்பு அருகே திரும்ப முயன்றது. அப்போது அந்த வழியாக தனியார் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த தனியார் பஸ், அரசு பஸ் மீது மோதியது.
இதில் 2 பஸ்களின் முன்பக்க கண்ணாடியும் நொறுங்கியது. விபத்தில் 2 பஸ்களிலும் பயணம் செய்த 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அவர்கள் ஆம்புலனஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மேலும் விபத்தின் போது சாலையோரம் நின்ற 2 இருசக்கர வாகன ஓட்டிகளும் நிலைதடுமாறி விழுந்தனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்.
முதல்கட்ட விசாரணையில் சிக்னலில் சிவப்பு விளக்கு போடப்பட்டதை கவனிக்காமல் தனியார் பஸ் டிரைவர் வேகமாக பஸ்சை ஓட்டி வந்ததே விபத்துக்கு காரணம் என தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த விபத்து காட்சிகள் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அதில் 2 பஸ்களும் மோதிக்கொள்வதும், கண்ணாடிகள் சுக்கு நூறாக நொறுங்குவதும் பதிவாகி இருந்தது. இந்த விபத்து குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
NEWS EDITOR : RP