தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் முன்னணி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் லியோ. த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கௌதம் மேனன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. ஆயுத பூஜையை முன்னிட்டு லியோ படம் நாளை (அக் 19) வெளியாக உள்ளது.லியோ திரைப்படத்தின் ஆடியோ – இசை வெளியீட்டு விழா தொடங்கி அதிகாலை காட்சி வெளியிடுவதை வரை பெரும் சிக்கல்கள். லியோ இசைவெளியீட்டு விழா சமயத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நிகழ்ச்சியில் அசம்பாவித புகார்கள் எழுந்தன. இதனையடுத்து நேரு விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்யப்பட்ட லியோ இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டது.படத்திற்கு சிறப்பு காட்சி திரையிட அனுமதி வழங்கியுள்ள தமிழக அரசு முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் நள்ளிரவு 1.30 மணி வரை காட்சிகள் திரையிடவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணிக்கு முதல் காட்சி தொடங்கினால் 16.5 மணி நேரத்தில் 5 காட்சிகள் திரையிட முடியாது.
லியோ படத்திற்கு முதல் 5 நாட்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு காட்சியை காலை 4 மணிக்கு முதல் காட்சி திரையிட அனுமதி வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அனிதா சுமந்த், நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் லியோ படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று, தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட முடியாது. இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசே முடிவெடுக்கும். அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி அளிக்க முடியாது 9 மணிக்கு தான் முதல் காட்சி திரையிட வேண்டும் என்பது அரசின் விதி என்றால் அதனை மீற முடியாது. அக்டோபர் 19-24 வரை காலை 7 மணி காட்சி திரையிடுவது தொடர்பான தமிழக அரசு பரிசீலனை செய்ய வேண்டும். இதற்காக தமிழக அரசிடம் தயாரிப்பு நிறுவனம் கோரிக்கை மனு கொடுக்க வேண்டும். இந்த மனுவுக்கு இன்று (அக்டோபர் 18) மதியத்திற்குள் அரசு பதில் அளிக்க வேண்டும் என்று நீதிபதி அனிதா சுமந்த் உத்தரவிட்டார்.
NEWS EDITOR : RP