அமலாக்கத்துறை தொடர் நடவடிக்கைகளுக்கு தார்மீக பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி பதவி விலக வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான முந்தைய அதிமுக ஆட்சியில் நடந்ததாக கூறப்படும் போக்குவரத்து துறை முறைகேடு குற்றச்சாட்டை அடுத்து அமலாக்கத்துறை அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர். சென்னை தலைமை செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அறையில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டனர்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லத்தில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் அவரை விசாரணைக்காக அழைத்து சென்றனர். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர் நெஞ்சு வலியில் கதறி அழுததை அடுத்து ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஆஞ்சியோ சிகிச்சை நிறைவடைந்ததையடுத்து அவருக்கு இதயத்தின் மூன்று முக்கிய ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்ப்பட்டுள்ளதால உடனே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என ஓமந்தூரர் பன்னோக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர்.
இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளார் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அவர் தெரிவித்ததாவது..
” அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது. இது இன்று நடந்த நிகழ்வுகளின் அடிப்படையில் அல்ல. அமலாக்கத்துறையின் தொடர்ச்சியான நடவடிக்கையின் மூலமகாத்தான் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கை உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தான் எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரட்டை வேடம் போடுகிறார்; மனித உரிமை குறித்து பேசுவதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தகுதி இல்லை.
தமிழ்நாடு முதலமைச்சர் ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சும், எதிர்கட்சியாக இருக்கும் போது ஒரு பேச்சும் பேசி வருகிறார். எனவே இந்த விவகாரத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் “ என எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டார்.
NEWS EDITOR : RP