“செயற்கை நுண்ணறிவு (AI) நம்முடைய சமூகத்தை இதுவரை எதிர்பார்க்காத வழிகளில் மறுவரையறை செய்து வருகிறது. AI தொழில்நுட்பத்தை வரவேற்கும் அதேவேளையில், AI மனித சமுதாயத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்பதை நாம் புறக்கணிக்க முடியாது. எனவே மனிதர்கள் தங்கள் இயற்கையான நுண்ணறிவுடன் எப்போதும் செயற்கை நுண்ணறிவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.
AI தொழில்நுட்பத்தின் அதிவேக வளர்ச்சி மற்றும் அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாறி வருகிறது. AI பயன்பாடுகள் கிட்டத்தட்ட இன்று எல்லா துறைகளிலும் காணப்படுகின்றன. AI தொழில்நுட்பத்தால் புதிய வாய்ப்புகள் உருவாகும் அதே வேளையில், அதன் பயன்படுத்தும்போது ஏற்படும் அபாயங்களைப் புரிந்துகொள்வதற்கும், அவற்றை நிர்வகிப்பதும் பெரும் சவாலாக உள்ளது.
தொழில்நுட்பத்தில் முன்னேறுவதற்கான போட்டியில் நாம் ஈடுபடுவதால், பாதுகாப்புகளில் நம்முடைய கவனம் குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அணு ஆயுத பயன்பாட்டைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும் ஒப்பந்தங்களைப் போலவே, AI-க்கும் ஒப்பந்தங்கள் வேண்டும் என கோரிக்கை AI தொழில்நுட்ப நிபுணர்களிடமிருந்தே எழுந்துள்ளது.
AI அமைப்புகளின் விளைவுகள் நேர்மறையாகவும், அவற்றின் அபாயங்களைக் கட்டுப்படுத்தக் கூடியதாகவும் இருந்தால் மட்டுமே, அவற்றின் உருவாக்கத்திற்கு நாடாளுமன்றங்கள் ஒப்புதல் தர வேண்டும். அனைத்து துறைகளுக்கும் பொருந்தக்கூடிய ஒரு ஒழுங்குமுறை கட்டமைப்பை அனைத்து அரசாங்கங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசரத் தேவை ஏற்பட்டுள்ளது.
இதில் நாடாளுமன்றத்தின் பணி கடினமானது, சவாலானது. ஏனெனில் AI மூலம் ஏற்படும் சிக்கல்கள், நாட்டின் நெறிமுறைகள், தனியுரிமை, வெளிப்படைத்தன்மை உள்ளிட்ட பலவற்றுடன் தொடர்புடையது. ஜனநாயகத்தின் முன் வைக்கப்படும் சவால்கள் பன்முகத்தன்மை கொண்டவை. AI நமக்கு முன்வைக்கும் ஒரு முக்கியமான சவால், இது வேலையின்மைக்கு வழிவகுக்கும். மேலும் லட்சக்கணக்கான ஊழியர்கள் வேலையை இழக்க நேரிடும். எனவே, நாம் கட்டமைக்கும் ஒழுங்குமுறைகள், வேலைவாய்ப்பை பாதுகாப்பதை உறுதி செய்ய வேண்டும். தேவைப்படும் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும்.
AI பயன்பாடுகளை ஒழுங்குபடுத்துவதற்கும் கட்டுப்படுத்துவதற்கும், AI-க்கான கொள்கைகளை வரையறுத்தல் வேண்டும். AI-ன் பல்வேறு அம்சங்களைப் பற்றிய ஒழுங்குமுறைகளை உருவாக்குவதற்கான அமைப்புகளை நிறுவும்படி நாடாளுமன்றங்கள் அதனதன் அரசுகளை வலியுறுத்த வேண்டும்.
AI தொடர்பான எந்தவொரு சட்டத்தையும் இயற்றும் முன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு வரைவுச் சட்டத்தை உருவாக்கி, பொதுமக்கள், துறை வல்லுநர்கள், தொழில்துறையினர், மனித உரிமை அமைப்புகள், பெண்கள் அமைப்புகள், குழந்தைகள் உரிமை அமைப்புகள் என பல்வேறு தரப்பினருடன் ஆலோசனை செய்ய வேண்டும். வடிவமைப்பு, மேம்பாடு, சரிபார்த்தல், வரிசைப்படுத்தல், கண்காணிப்பு மற்றும் சுத்திகரிப்பு கால தணிக்கை என ஒவ்வொரு கட்டத்திலும், நாம் வகுக்கும் AI-ன் கொள்கைகள் பொருந்தும் என்பதை AI மீதான சட்டம் உறுதி செய்ய வேண்டும்.
NEWS EDITOR : RP