தமிழ் திரையுலகில் இன்னும் திருமணம் ஆகாமல் இருக்கும் நடிகர்களுள் ஒருவர் விஷால். இவருக்கும் நடிகை லட்சுமி மேனனுக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக சினிமா வட்டாரங்களில் செய்திகள் வெளியாகின.
2014-ம் ஆண்டில் வெளியான ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் நடித்தபோது விஷால் – லட்சுமி மேனன் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. ஆனால் இருதரப்பிலும் இது பற்றிய விளக்கமோ, மறுப்போ தெரிவிக்கவில்லை. ஒருகட்டத்தில் இருவரும் பிரிந்துவிட்டதாகவும் பேசப்பட்டது.
இந்நிலையில், சமீபநாட்களாக நடிகர் விஷால் – நடிகை லட்சுமி மேனன் இருவருக்கும் திருமணம் நடக்க இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. இந்த நிலையில் இது குறித்து நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.
“பொதுவாக என்னைப் பற்றிய எந்த போலி செய்திகளுக்கோ அல்லது வதந்திகளுக்கோ பதிலளிப்பதில்லை. அப்படி செய்வது பயனற்றது என்று நான் நினைக்கிறேன். ஆனால் தற்போது நடிகை லட்சுமி மேனன் உடன் எனக்கு திருமணம் என்கிற ரீதியில் வதந்தி பரவி வருவதால், நான் இதை முற்றிலுமாக மறுக்கிறேன். இந்த செய்தி முழுக்க முழுக்க ஆதாரமற்றது.
என்னுடைய இந்த விளக்கத்துக்கு காரணம், இதில் சம்பந்தப்பட்டிருப்பவர் ஒரு நடிகை என்பதை விட முதலில் அவர் ஒரு பெண். நீங்கள் ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கைக்குள் நுழைந்து மற்றும் அவருடைய இமேஜைக் கெடுக்கிறீர்கள்.
ஆண்டு, தேதி, நேரம் மற்றும் எதிர்காலத்தில் நான் யாரை திருமணம் செய்யப்போகிறேன் என்பதை ஆராய்வதற்கு அது ஒன்றும் பெர்முடா முக்கோணம் அல்ல. நேரம் வரும்போது எனது திருமணம் குறித்து அதிகாரபூர்வமாக அறிவிப்பேன்”.
NEWS EDITOR : RP