மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் இருந்து வரத்து அதிகரிப்பதால் வரும் காலங்களில் தக்காளி விலை குறையும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே நாடு முழுவதும் பரவலாக தக்காளி விலை கடுமையாக அதிகரித்து வருகிறது. சில்லறை விற்பனையில் தக்காளி விலை சராசரியாக ஒரு கிலோ ரூ.200 முதல் ரூ.250 வரைக்கு விற்பனையானது. பருவமழை, கர்நாடக மாநிலம் கோலாரில் தக்காளி பயிர்களை பாதித்த ஒயிட் ஃப்ளை நோய் மற்றும் இன்னபிற காரணங்களால் விலை தொடர்ச்சியாக ஏறி வந்தது.
இந்நிலையில் தக்காளி விலை உயர்வு குறித்து மாநிலங்களவை உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு மத்திய நுகர்வோர், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே எழுதுபூர்வமாக அளித்த பதிலில், “மகாராஷ்டிராவின் நாசிக், நார்யாண்காவோன், அவுரங்காபாத் பகுதிகள் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் இருந்து தக்காளி வரத்து அதிகரிப்பதால் தக்காளி விலை படிப்படியாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது தக்காளி விலை உயர்வால் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இதனால் இன்னும் அதிகமாக தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுவார்கள். அப்போது சந்தையில் தக்காளி வரத்து அதிகரிக்கும். இது விலையில் ஒரு சமநிலையை ஏற்படுத்தும்” என்றார்.
அதேபோல் கடந்த 10 ஆம் தேதி முதலே தக்காளி விலை படிப்படியாகக் குறைவதாக அவர் கூறினார். ஜூலை 10 முதல் 16 ஆம் தேதி டெல்லி, பஞ்சாப், சண்டிகர், அந்தமான் தீவுகளில் தக்காளி கிலோ ரூ.150க்கு விற்பனையானது.
தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்தி மக்களுக்கு அது நியாயமான விலையில் கிடைக்க ஏதுவாக மத்திய அரசு அதனை கொள்முதல் செய்யத் தொடங்கியுள்ளது. அதனை மானிய விலையில் மக்களுக்கு வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் இழப்பை மத்திய, மாநில அரசுகள் 50:50 விகிதத்தில் பகிர்ந்து கொள்கிறது என்று அமைச்சர் விளக்கினார்
ஜூலை 18-ல் இப்பகுதிகளில் சராசரி விலை ரூ.130 ஆக்க குறைந்தது. ஜூலை 20ல் த்க்காளி விலை சராசரியாக ரூ.80 முதல் ரூ.70 வரை விற்பனையானது.
NEWS EDITOR : RP