மதுரை: மதுரைக்கும், காந்திக்கும் நெருங்கிய வரலாற்றுத் தொடர்பு உள்ளது. 1921-ம் ஆண்டில் மதுரை வந்தபோதுதான் காந்தி, ‘அரை ஆடைக்கு’ மாறினார். 1934-ம் ஆண்டில் மதுரைக்கு காந்தி வந்த பிறகுதான் ‘அரிசனங்களை ஆலயத்துக்குள் அனுமதிக்கக் கோரும் இயக்கம்’ உத்வேகம் பெற்றது.
அடுத்த சில ஆண்டுகளில் மீனாட்சி அம்மன் கோயிலில் அவர்கள் அனுமதிக்கப்பட்ட வரலாறும் நடந்தது. காந்தி மரணத்துக்குப் பிறகு அவரது அகிம்சை கொள்கைக ளை மக்களிடையே பரப்பும் நோக்கத்துடன் ‘அகில இந்திய காந்தி நினைவு நிதி’ நிறுவனத்தின் முயற்சியால் நாட்டின் 7 இடங்களில் காந்தி நினைவு அருங்காட்சியகங்கள் உருவாக்கப்பட்டன. அதில், முதலில் அமைந்தது மதுரை யில்தான். இதை 1959 ஏப்ரல் 15-ல் அப்போதைய பிரதமர் நேரு திறந்து வைத்தார்.
இந்த காந்தி அருங்காட்சியகக் கட்டிடம் மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாள் கி.பி., 1670-ம் ஆண்டில் கட்டியது. நாயக்கராட்சிக்குப் பின்னர் கர்நாடக நவாப் வசமும் பின்னர் பிரிட்டிஷார் கைக்கும் மாறியது. பிரிட்டிஷ் நீதிபதிகள், அடுத்து மாவட்ட ஆட்சியர் இல்லமாகவும் திகழ்ந்து வந்த இந்த அரண்மனை கட்டிடத்தை, தமிழக அரசு 1955-ம் ஆண்டு அகில இந்திய காந்தி நினைவு நிதி நிறுவனத்திடம் வழங்கியது.
தற்போது இக்கட்டிடம் நாயக்கர், பிரிட்டிஷார், காலம் மற்றும் தற்காலக் கட்டிடக்கலை அம்சங்க ளுடன் காட்சியளிக்கிறது. இக்கட்டிடத்தின் வெளிப்புறம் மட்டுமே அரண்மனை தோற்றத்தில் உள்ளது. உட்புறம் அவ்வப்போது சில புதுப்பிக்கும் பணியால் அதன் இயல்பான அரண்மனைத் தோற்றத்தை இழந்தது.
காந்தி அருங்காட்சியகத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், மாணவர்கள், நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாற்றுச் சான்றுகள், காந்தி பயன்படுத்திய பொருட்கள், நிழற்படங்கள் போன்றவற்றை பார்க்க வருவதோடு, அருங் காட்சியகம் அமைந் துள்ள ராணி மங்கம்மாள் அரண்மனை யின் கட்டிடக் கலையையும் வியந்து பார்க்கின்றனர்.
அதனால், தமிழக அரசு ரூ.6 கோடியில் காந்தி அருங்காட்சியகத்தின் உட்புறத் தோற்றம் அதன் பழைய அரண்மனைத் தோற்றத்துக்கு மாற்றுவதோடு காந்தியின் வரலாற்றை எளிமையாக அறிய அருங்காட்சியகம் டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது.
இது குறித்து அருங்காட்சியகச் செயலாளர் கே.ஆர். நந்தா ராவ் கூறியதாவது: காந்தி பயன்படுத்திய 14 பொருட்கள் இங்கு உள்ளன. அவற்றில் முக்கியமானது காந்தி இறக்கும்போது அணிந்திருந்த ரத்தக்கறை படிந்த மேல் துண்டு. இது காற்றுப்புகா கண்ணாடி பேழைக்குள் அடைத்து காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
காந்தி அருங்காட்சி யகத்துக்கு கடந்த காலத்தில் சராசரியாக ஆண்டுக்கு 7 லட்சம் பேர் பார்வையிட்டனர். கரோனா காலத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்தது. தற்போது மெல்ல மெல்ல அதிகரித்து 2022-2023 ஆண்டில் (ஏப்ரல்-மார்ச்) வரை 4 லட்சத்து 24 ஆயிரத்து 239 சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனர். இவர்களில் 1,958 பேர் வெளிநாட்டினர். 70, 384 பேர் பள்ளி மாணவர்கள். அடுத்த ஆண்டில் 7 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை இலக்கை அடைந்துவிடுவோம்.
பொதுப்பணித் துறையின் பாரம்பரியக் கட்டிடக்கலைப் பிரிவு சார்பில் காந்தி அருங்காட்சி யகத்தின் உட்புறம் பழைமை மாறாமல் புதுப்பிக்கப்படுகிறது. அதுபோல், நூலகமும் புதுப்பொலிவாகிறது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள், காந்தியின் விடுதலைப் போராட்ட வரலாறு புகைப்படங்களை பார்த்து எழுத்துகளைப் படித்து தெரிந்து கொள்ளும் வகையில் உள்ளது.
ஆனால், இவை அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட உள்ளது. தொடு திரை உதவியுடன் காந்தி தொடர்புடைய படங்களையும் அவரது வரலாற்று விவரங்களையும் டிஜிட்டலில் படித்துப் பார்த்துத் தெரிந்து கொள்ளும் வகையில் மாற்றப்பட உள்ளது. இந்த டிஜிட்டல் சேவை, தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மூன்று மொழிகளில் அமைக்கப்பட உள்ளது. மாற்றுத் திறனாளிகள், முதியோர் காந்தி அருங்காட்சி யகத்தை எளிதில் பார்க்கும் வகையில் மின்தூக்கி (லிப்ட்) வசதியும் செய்யப்படுகிறது, ’’ என்று கூறினார்.
NEWS EDITOR : RP