ஒரு கொலை. அதனை துப்பறியும் திரைக்கதை. இந்த வகைமையைப் பற்றிப் பிடித்துக்கொண்டு ஆரம்பத்தில் தமிழில் பெரும்பாலான வெப் சீரிஸ்கள் வெளியாகின. இந்த க்ரைம் த்ரில்லர் பாதையை ‘அயலி’ மடைமாற்றி சமூகம் சார்ந்த கன்டென்ட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்தது. அதைத் தொடர்ந்து தற்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகியிருக்கும் ‘மத்தகம்’ கேங்க்ஸ்டர் ட்ராமா கதைக்களத்தில் அடியெடுத்து வைத்து தமிழ் வெப் சீரிஸ்களுக்கு புதுமுகம் கொடுத்துள்ளது.
பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த நிழல் உலக தாதா படாளம் சேகர் (மணிகண்டன்) இரண்டு வருடங்களுக்கு முன்பு கார் விபத்து ஒன்றில் உயிரிழந்துவிட்டதாக கருதப்பட்ட நிலையில், அவர் திரைமறைவில் வாழும் செய்தி ஒன்று காவல் துறை காதுகளுக்கு எட்டுகிறது. இது தொடர்பான தீவிர விசாரணையில் இறங்கும் டிசிபி அஷ்வத்துக்கு (அதர்வா) பல அதிர்ச்சி சம்பவங்கள் காத்திருக்கின்றன. ஒட்டுமொத்த ரவுடிகளையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து ‘பர்த்டே பார்டி’ என்ற பெயரில் மிகப் பெரிய சம்பவம் ஒன்றுக்கு திட்டம் தீட்டுகிறார் படாளம் சேகர். அந்தத் திட்டம் குறித்து அறிந்துகொள்ள அவரை பின்தொடரும் அஷ்வத்துக்கு காவல் ஆணையரின் உதவி, அரசியல் அழுத்தம் காரணமாக பல குறுக்கீடுகள் நிகழ்கின்றன. இறுதியில் படாளம் சேகரை அஷ்வத் நெருங்கினாரா இல்லையா என்பது ‘மத்தகம்’ சீரிஸின் முதல் 5 எபிசோடு திரைக்கதை.
தற்போதைக்கு 5 எபிசோடுகள் மட்டுமே வெளியாகியுள்ள இந்தத் தொடரை ‘கிடாரி’ படம் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் பிரசாத் முருகேசன் இயக்கியுள்ளார். முதல் 3 எபிசோடுகளில் காவல் துறைக்கும், ரவுடிகளுக்குமான ஒரு உலகை கச்சிதாகக் கட்டமைக்கிறது திரைக்கதை. குறிப்பாக, ஒவ்வொரு குற்றவாளியையும் அறிமுகப்படுத்தும் விதம், அவர்களுக்கான வெவ்வேறு வகையான பின்கதை கவனம் பெறுகிறது. ‘சங்கு’ கணேசன் , ‘காய்ன்’ சிவா, ‘சூளை’ பாபு, திமிங்கலம், ஐஸ் பாக்ஸ், மாவா சைட் போன்ற ரவுடிகள் பெயர்கள் தனித்துவத்துடன் ஈர்க்கின்றன.
அதிலும் சூளை பாபுவின் இன்ட்ரோ ரசிக்கும்படியாக இருந்தது. ‘ஒரு மனுஷன் இன்னொரு மனுஷனுக்கு அடங்கி போக ரெண்டே காரணம்தான். ஒண்ணு, அவனால எதாச்சும் பலன் இருக்கணும், இல்லன்னா பயம் இருக்கணும்’ உள்ளிட்ட வசனங்கள் ஷார்ப். ‘தானோஸ்’, ‘பூமர்’ போன்ற தற்போது ட்ரெண்டிங் வார்த்தை பயன்படுத்தியது, தொந்தரவில்லாமல் நடுவில் வந்து போகும் ‘ஷார்ட்ஸ்’ வகையறா பாடல்களும் பொருத்தம். வழக்கமாக ஒவ்வொரு எபிசோட்டையும் சஸ்பென்ஸுடன் முடிக்கும் வழமைக்கு இந்த தொடர் முடிவு கட்டியிருக்கிறது.
திருடன் – போலீஸ் கதைதான் என்றாலும் அதனை முடிந்த அளவுக்கு எங்கேஜிங்காக கொண்டு செல்ல ரவுடிகளுக்கான வெயிட்டை ஏற்றியிருப்பதும், அதற்கான சின்ன சின்ன டீடெய்லிங்கும் தொடருக்கு உயிர் கொடுக்கிறது. க்ளீன்ஷேவ், ஸ்ட்ரிக்ட் ஆஃபிசராக அதர்வா போலீஸ் கதாபாத்திரத்துக்கு பக்கா பொருத்தம். தேவைக்கு அதிகமாக உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் இறுதி வரை ஒரே மீட்டரில் நடிப்பை கொண்டு சென்ற விதத்தில் தன்னுடைய கேரக்டரை நேர்த்தியாக கையாண்டிருக்கிறார்.
படாளம் சேகராக மணிகண்டன். ஓவர் பில்டப் எதுவுமில்லாமல் கொடுக்கப்படும் சாதாரண இன்ட்ரோ மூலம், ‘இவரு ரவுடி’யா என ஆரம்பத்தில் நினைக்கவைத்தாலும் போகப் போக பொருந்திப்போகிறார். (உண்மையில் யதார்த்த ரவுடிகள் பெரும்பாலும் கட்டுமஸ்தான உடலையோ, சிக்ஸ் பேக்கையோ வைத்திருப்பத்தில்லை). மணிகண்டன் கோபப்பட்டு திட்டும் இடங்கள் ரசிக்க வைக்கின்றன. காதலியிடம் உருகுவது, நண்பன் மீதான அசையா நம்பிக்கை, போலீஸ் நெருங்கும்போது கூடும் மன உறுதி என மிரட்டுகிறார். ‘விக்ரம் – வேதா’ பட பாணியில் இரண்டு பேரையும் நேர் எதிராக நிறுத்தி அவர்களுக்கிடையிலான திருடன் – போலீஸ் கதை அமைத்தது சுவாரஸ்யமான ஐடியா.
தொடரில் ஈர்க்கும் மற்றொரு கதாபாத்திரம் நிகிலா விமலுடையது. ‘நான் பேசுறது கேக்கலையா?’ என அதர்வா கூறும்போது, ‘நான் பேசுறப்போ உனக்கு கேக்குறதே இல்லையே’ என அவரை குற்றப்படுத்தும் இடங்கள் நறுக். ‘போஸ்ட் பிரக்னன்சி டிப்ரஷன்’ எனப்படும் ஒரு பெண்ணின் பிரசவ காலத்துக்கு பிந்தைய மன அழுத்தத்தை நிகிலா விமல் அழுத்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார். தில்னாஸ் இரானி – கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் அதர்வா – நிகிலா விமல் இரண்டு தம்பதிகளை வேறுபடுத்தி பார்க்க முடியும். அவர்களுக்கிடையிலான புரிதலையும், வேலைப் பகிர்தலையும் நுணுக்கமாக எழுதியிருப்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று. தவிர்த்து இளவரசு, வடிவுக்கரசி, திவ்யதர்ஷினி, நந்தினி உள்ளிட்ட பலர் கதாபாத்திரத்துக்கு தேவையான பங்களிப்பை செலுத்தியுள்ளனர்.
தொடரின் முதல் 3 எபிசோடுகள் கேங்க்ஸ்டர் உலகை கட்டமைத்து, அதற்குள் நடக்கும் சம்பவங்களை நேர்த்தியாக்கி அவர்களை துரத்தும் காவல் துறையையும், அதிலிருக்கும் அரசியல் அழுத்தங்களையும் கொண்டு ஆழமாகவே எழுதப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு எபிசோடுகள் கதையை நகர்த்த முடியாமல் ஒரே இடத்தில் சுற்றிக்கொண்டிருப்பது போன்ற உணர்வை கொடுக்கிறது.
NEWS EDITOR : RP