ஹரியானாவைச் சேர்ந்த பெண் விவசாயிகள் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை டெல்லியில் உள்ள அவர்களது இல்லத்தில் இன்று சந்தித்தனர். ஹரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில் உள்ள மதீனா கிராமத்திற்கு கடந்த 8-ம் தேதி சென்ற ராகுல் காந்தி, டெல்லிக்கு வந்தால் மதிய உணவு சாப்பிட தனது வீட்டிற்கு வருமாறு அங்குள்ள பெண் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்தார்.
இதனையேற்று, மதீனா கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண் விவசாயிகள் தனி வேனில் டெல்லியில் உள்ள சோனியா காந்தியின் இல்லத்திற்கு வந்தனர். அவர்கள் தங்கள் நிலங்களில் அறுவடை செய்த விளைப்பொருட்கள், பால், லெஸி உள்ளிட்டவற்றை எடுத்து வந்தனர்.அப்போது அவர்களை வரவேற்று, சோனியா காந்தி, ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் உபசரித்தனர். மேலும், பெண் விவசாயிகளுக்காக தடல்புடலான விருந்தும் பரிமாறப்பட்டது. மேலும், பெண் விவசாயிகள் அவர்களுக்கு பரிமாறிய ராகுல்காந்திக்கு உணவு ஊட்டிவிட்டனர்.
பின்னர் வீட்டை முழுமையாக சுற்றிப் பார்த்த பெண் விவசாயிகள், அங்கு ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தியுடன் மனம் திறந்து பேசினர். மேலும், அவர்கள் சோனியா காந்தியிடமும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களில் ஒருவர் ராகுல் காந்திக்கு ‘திருமணம் செய்து வையுங்கள்’ என்று கூறினார்.
உடனடியாக நீங்களே பொருத்தமான பெண்ணை பாருங்கள் என அந்த பெண் விவசாயிடம் சோனியா காந்தி கூறினார். இதனை கேட்டு மற்ற பெண் விவசாயிகள் சிரித்தனர்.
இதனையடுத்து, சோனியா காந்தியின் வீட்டில் உள்ள நூலகத்திற்கு ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தியை அழைத்துச் சென்ற பெண் விவசாயிகள், அங்குள்ள நூல்கள் குறித்து கேட்டறிந்தனர். பின்னர், புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்த பகுதிக்குச் சென்ற விவசாயிகள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். இதுமட்டுமல்லாமல், டெல்லியில் உள்ள இந்தியா கேட் உள்ளிட்ட வரலாற்றுச் சிறப்புமிகுந்த இடங்களுக்கும் பெண் விவசாயிகள் சென்று சுற்றிப் பார்த்தனர்.
NEWS EDITOR : RP