லியோ திரைப்படத்தின் முதல் பாடல் இன்று 6.30 மணிக்கு வெளியாகும் என படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற ஆக்ஷன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இப்படத்தில் த்ரிஷா, பிரியா ஆனந்த், கவுதம் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜுன், கதிர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். மேலும் மிஷ்கின், சஞ்சய் தத் இருவரும் வில்லன்களாக நடிப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத்தின் இசையில் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது. மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக 14 வருடங்களுக்கு பிறகு த்ரிஷா நடிக்கிறார். இந்த படத்தின் கேரள மாநில வெளியீட்டு விநியோக உரிமை ரூ.16 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், வெளிநாட்டு உரிமம் ரூ.60 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இப்படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. லோகேஷ் – விஜய் கூட்டணியில் உருவாகி நல்ல வரவேற்பை பெற்ற “மாஸ்டர்” திரைப்படத்தை தொடர்ந்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு மிகவும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் நடிகர் விஜய் பிறந்தநாளான இன்று ‘லியோ’ திரைப்படத்தின் முதல் பாடலான “நா ரெடி” என்ற பாடல் மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். முன்னதாக லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நள்ளிரவு வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
NEWS EDITOR : RP