திண்டுக்கல்-பழனி சாலையில் முருகபவனம் பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை
நிலையம் அருகே நேற்று மதியம் 3.15 மணியளவில் 2 மோட்டார் சைக்கிள்களில் 3 பேர்
வாக்குவாதம் செய்தபடியே வந்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது . அதில் ஒரு
மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர் பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவரிடம் தகராறில் ஈடுபட்டதாவும், தகராறு முற்றிய நிலையில் 2 பேரும் சேர்ந்து தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து இளைஞரை வெட்ட முயன்ற போது
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு
அங்கிருந்து தப்பிச்செல்ல முயன்றார்.
ஆனால் மற்ற 2 பேரும் அவரை தடுத்ததால் பதற்றமடைந்த அவர் பெட்ரோல் விற்பனை நிலையத்துக்குள் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால் அதற்குள் அவரை விரட்டி வந்த 2 பேரும் அரிவாளால் இளைஞரின் கழுத்து, முகத்தில் சரமாரியாக வெட்டினர்.
இதில் படுகாயமடைந்த அந்த இலைஞர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். சம்பவம் குறித்து தகவலறிந்த மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் மற்றும் காவலர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் அங்குள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதற்கிடையே காவல் துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன், துணை கண்காணிப்பாளர் கோகுல கிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். மேலும் கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை விரைந்து பிடித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டனர்.
அதையடுத்து மேற்கு காவல்துறையினர் இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் சாணார்பட்டி அருகே உள்ள பெத்தையகவுண்டன்பட்டியை சேர்ந்த அழகுபாண்டி (வயது 25) என்பதும், திண்டுக்கல்லை அடுத்த செட்டிநாயக்கன்பட்டியில் உள்ள வெல்டிங் பட்டறையில் தொழிலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது.
மேலும் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கடந்த 2019-ம் ஆண்டு அழகுபாண்டியை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறை கைது செய்தது தெரியவந்தது. இதுதவிர நேற்று முன்தினம் அழகுபாண்டி வேலை பார்க்கும் இடத்தில் சிலர் அவருடன் தகராறில் ஈடுபட்டதும், விசாரணையில் தெரியவந்தது. மேலும் முன்விரோதம்
காரணமாக இந்த கொலை நடந்திருக்குமா? அல்லது வேறு ஏதேணும் காரணமா? என்று காவல் துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
NEWS EDITOR : RP