கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், ஓயூரைச் சேர்ந்த 6 வயது சிறுமி சாரா ரிஷி. இவர் நேற்று மாலை தனது அண்ணன் ஜோனாதனுடன் டியூஷனுக்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது காரில் வந்த 4 பேர்கொண்ட மர்ம கும்பல் சாராவை காரில் இருந்தபடியே வலுகட்டாயமாக கடத்திச் சென்றது. அந்த மர்ம கும்பல் தொலைபேசி மூலம், சாராவின் பெற்றோரை அழைத்து உங்கள் மகளை கடத்திவிட்டதாகவும், சிறுமியை விடுவிக்க ரூ.5 லட்சம் கொடுக்குமாறும் கூறியுள்ளது. பின்னர் இரவு 10 மணிக்கு மீண்டும் அழைத்து ரூ.10 லட்சம் தருமாறு மிரட்டியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் துறையில் புகார் அளித்தனர்.
இந்நிலையில் திருவனந்தபுரம், கொல்லம் மற்றும் பத்தனம்திட்டா மாவட்ட எல்லைப் பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வந்தனர். மேலும், இன்று காலை திருவனந்தபுரத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.இந்நிலையில், விசாரணை தீவிரமானதை தொடர்ந்து, அந்த மர்ம கும்பல் குழந்தையை கொல்லம் ஆசிரமம் அருகே விட்டுவிட்டு தப்பி ஓடியது. 21 மணி நேரத்திற்கு பின் சிறுமி கிடைத்ததை தொடர்ந்து பெற்றோர் நிம்மதி அடைந்தனர். கடத்தப்பட்ட குழந்தை குறித்த பதற்றம் அதிகரித்ததையடுத்து, விசாரணையை தீவிரப்படுத்த மாநில காவல்துறைக்கு முதலமைச்சர் பினராயி விஜயன் நேற்று உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
NEWS EDITOR : RP