முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு சென்னையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக-வினர் அமைதிப் பேரணி மேற்கொண்டனர்.
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் உள்ள கருணாநிதி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய முதல்வர் மு.க. ஸ்டாலின், பின்னர் அங்கிருந்து பேரணியை தொடங்கினார். முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான இந்த பேரணியில் தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், நேரு, பொன்முடி, எ.வ.வேலு, உதயநிதி ஸ்டாலின், மஸ்தான், தங்கம் தென்னரசு, சேகர் பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன், கனிமொழி உட்பட திமுக அமைச்சர்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக மூத்த நிர்வாகிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த பேரணியில் பங்கேற்றனர்.இந்த பேரணியை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் சென்ற இந்த பேரணி, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் நிறைவடைந்தது. அங்கு முதல்வர் ஸ்டாலின் உட்பட அனைவரும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
NEWS EDITOR : RP