நாமக்கல் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள அகரம் கிராமத்தில் வசித்து வருபவர் தேவராஜன் (வயது42). இவர் சொந்தமாக ஆள்குழாய் அமைக்கும் வாகனங்களை (ரிக்) வைத்து தொழில் செய்து வருகிறார். கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மத்திய பிரதேசத்தில் இவருக்கு சொந்தமான ஆள்குழாய் கிணறு அமைக்கும் லாரி விபத்துக்குள்ளாகி சாய்ம்பூர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விபத்துக்குள்ளான வாகனத்திற்கு இழப்பீடு கேட்டு அவர் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு விண்ணப்பம் செய்தார். ஆனால் இன்சூரன்ஸ் நிறுவனம் அனுமதிக்கப்பட்ட நபர்களை விட கூடுதலாக வாகனத்தில் ஆட்களை ஏற்றி சென்றதால் இழப்பீடு தர முடியாது என தெரிவித்து விட்டது. இதனால் வாகன உரிமையாளர் இழப்பீடு கேட்டு நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் கடந்த 2018-ம் ஆண்டு வழக்கு தாக்கல் செய்து இருந்தார்.
இதனை விசாரித்த நாமக்கல் மாவட்ட நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி டாக்டர் வீ. ராமராஜ், ரிக்வண்டியின் உரிமையாளருக்கு, வாகனத்தை பழுது நீக்க ஏற்பட்ட செலவு ரூ.2 லட்சத்து 77 ஆயிரத்தை 6 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும். மேலும் சேவை குறைபாட்டால் ஏற்பட்ட சிரமங்களுக்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரத்தை 4 வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.
NEWS EDITOR : RP