சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷுக்கு, எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் துறை (போர்ட்ஃபோலியோ) வழங்கப்பட்டிருந்தது. திமுகவைச் சோ்ந்த அமைச்சா்கள் ஐ.பெரியசாமி, பொன்முடி, தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோா் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளில் ஏற்கெனவே கீழமை நீதிமன்றங்களில் அவா்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், அந்த வழக்குகளை ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தாா்.
அதேபோல், முன்னாள் முதல்வா் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளா்மதி ஆகியோருக்கு எதிரான வழக்குகளையும் விசாரணைக்கு எடுத்தார் ஆனந்த் வெங்கடேஷ். இந்த நிலையில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அக். 3 முதல் 3 மாதங்களுக்கு உயா்நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டுள்ளார். சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் 3 மாதங்களுக்கு ஒருமுறை உயா்நீதிமன்ற மதுரை கிளை பணிக்கு மாற்றப்படுவது வழக்கம்.அந்தவகையில், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், 2020, 2021-ஆம் ஆண்டில் தாக்கலான கனிமம், நில சீா்திருத்தம், நில உச்சவரம்பு, நிலம் கையகப்படுத்துதல், சுதந்திர போராட்ட தியாகிகள் தொடா்பான ரிட் மனுக்களை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
NEWS EDITOR : RP