புகார் தெரிவித்தும் கவர்னர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது வருத்தம் அளிக்கிறது என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி நாகர்கோவில்: புகார் தெரிவித்தும் கவர்னர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்காதது வருத்தம் அளிக்கிறது என கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். கனிமொழி எம்.பி. தி.மு.க. எம்.பி. கனிமொழி நேற்று தூத்துக்குடியில் இருந்து கார் மூலம் நாகர்கோவிலுக்கு வந்தார். பின்னர் நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்ற அவருக்கு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாநகராட்சி மேயர் மகேஷ் ஆகியோர் தலைமையில் பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அரசியல்வாதி போல் செயல்படுகிறார் தமிழகத்தில் தி.மு.க. பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்துள்ளது. பெண்கள் மற்றும் ஏழைகளுக்கு தி.மு.க. பாதுகாப்பு அரணாக விளங்கி வருகிறது. இந்தியாவில் உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு வளர்ச்சி பணியில் ஒரு முன்னுதாரணமாக விளங்கி வருகிறது.
தமிழக கவர்னர் தொடர்ந்து அரசியல்வாதி போல் செயல்பட்டு வருகிறார். தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக அவர் கருத்துகளையும் தெரிவித்து வருகிறார். இதனை தமிழக மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. இதுகுறித்து மத்திய அரசிடம் தெரிவித்தும், கவர்னர் மீது எந்தவித நடவடிக்கை எடுக்கவோ, கண்டிக்கவோ இல்லை என்பது தான் வருத்தம் அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார். நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பின்னர் நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள தி.மு.க. கட்சி அலுவலகத்தில் நடந்த மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டார். அப்போது தனித்தனியாக நிர்வாகிகளை சந்தித்து கட்சியின் மேம்பாடு மற்றும் வளர்ச்சி பணிகள் உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்துரையாடினார்.
இதில் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், மீனவரணி முன்னாள் அமைப்பாளர் நசரேத் பசிலியான் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கனிமொழி எம்.பி. கட்சி அலுவலக வளாகத்தில் உள்ள மறைந்த முதல்-அமைச்சர் கருணாநிதி சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
NEWS EDITOR : RP