இந்தியாவில் வாடகைக்கு விடும் புதிய திட்டத்தை ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்துள்ளது. இது புல்லட் பிரியர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.நம் நாட்டின் குக்கிராமம் முதல் எல்லைப் பகுதி வரை அனைத்து சாலைகளிலும் கடந்த 1949-ல் இருந்து இன்று வரை ஓயாமல் ஓடி கொண்டிருக்கும் இரு சக்கர மோட்டார் வாகனம் தான் ராயல் என்ஃபீல்டு புல்லட். பீரங்கியிலிருந்து வெளிவரும் குண்டுகள் போல புட்டு.. புட்டு.. புட்டு.. என புல்லட்டின் சைலன்சரில் இருந்து வெளிவரும் சத்தமும், சீறி வரும் காளையை போன்ற தோற்றமும்தான் அதன் கெத்து. நம் கிராமங்களில் பண்ணையார் துவங்கி காவல்துறை, இராணுவம், பைக் பிரியர்கள் என பெரும்பாலானவர்களின் கனவு மற்றும் பேவரைட் வாகனம்.
இதன் ரசிகர் பட்டாளத்துக்கு எண்ட் என்பதே கிடையாது. காலத்துக்கு ஏற்ப புதிய அப்டேட்கள் மற்றும் மாடல்களை ராயல் என்ஃபீல்டு அறிமுகம் செய்துள்ளது. இருந்தாலும் அதன் விலை சற்றே அதிகம். இத்தகைய சூழலில்தான் Rent.Ride.Repeat என்ற திட்டத்தை அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இது அந்த நிறுவனத்தின் வாகனத்தை ரைட் (Ride) செய்துவிட வேண்டும் என விரும்பும் சாமானியரின் கனவை மெய்ப்பிக்கும் வகையில் அமைந்துள்ளது.இந்தியாவில் சென்னை, மணாலி, லே, புதுடெல்லி, கோவா, சிம்லா, கொச்சின், சண்டிகர், விசாகப்பட்டினம் என சுமார் 26 நகரங்களில் இந்த திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதற்காக வாகனங்களை வாடகைக்கு விடும் நிறுவனங்களுடன் ராயல் என்ஃபீல்டு இணைந்துள்ளது. அந்நிறுவன வாகனங்களை வாடகைக்கு பெற விரும்புபவர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
NEWS EDITOR : RP