ராமேசுவரம், சர்வதேச யோகா தினம் உலகம் முழுவதும் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. பிரதமர் மோடியின் வேண்டுகோளின்படி, ஆண்டுதோறும் ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்படும் என்று கடந்த 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஐ.நா. பொதுச்சபை அறிவித்தது. முதல்முறையாக, 2015-ம் ஆண்டு ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.
இதன்படி, இந்த ஆண்டு 9-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு வசுதேவ குடும்பகம் என்ற கருப்பொருள் அடிப்படையில் இந்த தினம் கடைப்பிடிக்கப்பட உள்ளது.
இதனை முன்னிட்டு நாடு முழுவதும் மக்கள் ஆர்வமுடன் காலை முதலே யோகா பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய மந்திரிகள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், திரை துறை, விளையாட்டு துறை உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்களும் யோகா பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
சர்வதேச யோகா தினத்தில் ராமேசுவரத்தில் யோகா பயிற்சியாளர்கள் நீரில் மிதந்தபடி யோகா பயிற்சிகளை செய்தனர். நீர் யோகா எனப்படும் இந்த யோகாவின்படி அவர்கள் கைகளை இருபுறமும் நீட்டியபடி, கால்களை நேராக நீட்டி யோகா பயிற்சி செய்தனர். பின்னர், கால்களை மடக்கி, கைகளை நீட்டியபடியும், மடக்கியபடியும் நீரில் மிதந்தபடி அவர்கள் யோகா பயிற்சியில் ஈடுபட்டனர்.
NEWS EDITOR : RP