உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் முதல் நாளின் இறுதியில் இந்தியா சோர்வாகவும், மனமுடைந்தும் காணப்பட்டது என முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். லண்டன், இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கியது.வானம் மேகமூட்டமாக காணப்பட்டதால் ‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் ரோகித் சர்மா தயக்கமின்றி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதைத் தொடர்ந்து டேவிட் வார்னரும், உஸ்மான் கவாஜாவும் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர். உஸ்மான் கவாஜா (0) ரன் கணக்கை தொடங்கும் முன்பே சிராஜியின் பந்து வீச்சில் வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு படிப்படியாக மீண்டு வந்தது, ஆஸ்திரேலியா.
அணியின் ஸ்கோர் 71 ஆக உயர்ந்த போது வார்னர் (43 ரன்) ஷர்துல் தாக்குர் வீசிய ‘ஷாட்பிட்ச்’ பந்தில் விக்கெட் கீப்பர் பரத்திடம் சிக்கினார். இன்னொரு பக்கம் லபுஸ்சேன் இந்திய புயல்வேகத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் லபுஸ்சேன் (26 ரன்) ஷமியின் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார்.
4-வது விக்கெட்டுக்கு ஸ்டீவன் சுமித்தும், டிராவிஸ் ஹெட்டும் கூட்டணி அமைத்தனர். முதல் பகுதியில் இந்திய அணி நன்றாக செயல்பட்டாலும் பிற்பகுதியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது, ஆஸ்திரேலிய அணி. ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்சில் 85 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 327 ரன்கள் சேர்த்துள்ளது. டிராவிஸ் ஹெட் 146 ரன்களுடனும், ஸ்டீவன் சுமித் 95 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
இந்நிலையில் போட்டி குறித்து தனியார் சேனலில் பேசிய இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் பின்வருமாறு கூறினார். முதல் நாளின் இறுதி செஷ்சனில் இந்தியா சோர்வாக காணப்பட்டது. இந்திய அணியினர் மனமுடைந்து காணப்பட்டனர். டிராவிஸ் ஹெட் 146 மற்றும் ஸ்டீவ் ஸ்மித் 95 ரன்களுடன் களத்தில் உள்ளனர். ஆஸ்திரேலிய அணியினர் 550-600 ரன்கள் எதிர்பார்க்கிறார்கள். மேலும், இந்த போட்டியில் அபாரமாக ஆடிய டிராவிஸ் ஹெட் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சதம் நொறுக்கிய முதல் வீரர் என்ற வரலாற்று பெருமையை பெற்றது குறிப்பிடத்தக்கது.
NEWS EDITOR : RP