சென்னை மத்திய குற்ற பிரிவு, சைபர் கிரைம் பிரிவினரால் இந்த கூட்டம் நடத்தப்பட்டது. இந்த ஒருங்கிணைப்பு கூட்டத்திற்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப் ராய் ரத்தோர் தலைமை தாங்கினார்.
ஒருங்கிணைப்பு கூட்டத்திற்கு வங்கிகள் மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்களைச் சார்ந்த பொறுப்பு அதிகாரிகள் 60 பேர் பங்கேற்றனர். கூட்டத்தின் போது சைபர் குற்ற பிரிவில் 2023-ம் வருடத்தில் மட்டும் 1,526 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அதில் வங்கிகள் மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்களின் உதவியுடன் குற்ற செயல்களில் ஈடுபட்ட 147 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் சென்னை காவல்துறை தெரிவித்தது.
மேலும் வங்கிகள் மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்களின் உதவியுடன் பாதிக்கப்பட்ட நபர்களின் இழந்த தொகை ரூ.2,18,59,943 மீட்கப்பட்டுள்ளதாகவும் சென்னை காவல்துறை தெரிவித்தது. இணைய வழி குற்றங்களில் ஈடுபட்டவர்களை கைது செய்யவும், பணத்தை மீட்டெடுக்கவும் காவல் துறையினருக்கு உதவியாக இருந்த வங்கிகள் மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்களைச் சார்ந்த பொறுப்பு அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்த சான்றிதழ்களை பெருநகர சென்னை காவல் ஆணையர் வழங்கினார்.
மேலும் இந்த ஒருங்கிணைப்பு கூட்டத்தில், சைபர் குற்ற வழக்குகளில் காவல் துறையினர் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பேசப்பட்டது. தொடர்ந்து அதனை சவால்களை மேற்கொள்ள வங்கிகள் மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்களின் இன்றியமையாத சேவைகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து சைபர் குற்ற அவசர எண் 1930 மூலமாக பதிவு செய்யப்படும் புகார்கள் விரைந்து நடவடிக்கை எடுப்பது பற்றியும் கலந்தாலோசிக்கப்பட்டது.