வரும் 2024ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஒரே அணியாக இணைந்து எதிர்கொள்ள, எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு வருகின்றன. இதற்கான ஆலோசனை கூட்டம் பீகார் தலைநகர் பட்னாவில் இன்று நடைபெற்றது. அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி, முதலமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், பகவந்த் மான், ஹேமந்த் சோரன் மற்றும் சரத்பவார், லாலுபிரசாத், அகிலேஷ் யாதவ், உத்தவ் தாக்கரே, உமர் அப்துல்லா , சீதாராம் யெச்சூரி மற்றும் டி.ராஜா உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.
நண்பகல் 12 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடைபெற்று முடிவுக்கு வந்தது. ஆலோசனைக்கூட்டம் முடிந்த நிலையில் மேற்கு வங்க முதல் அமைச்சரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
”ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து தேர்தலை சந்திக்க போகிறோம், எங்களை எதிர்க்கட்சிகள் என்று அழைக்காதீர்கள். எங்களை நாட்டின் குடிமக்கள் என்று அழையுங்கள் நாங்கள் பாரத மாதாவின் மகன்கள், மகள்கள் என்று அழையுங்கள்
எங்கள் பாரத மாதாவை காப்பாற்ற நாங்கள் ஒன்றிணைந்திருக்கிறோம். மணிப்பூர் மாநிலத்தில் என்ன நடக்கிறது என பாருங்கள். அதை தடுக்க மத்திய அரசு ஏதாவது செய்ததா? ராஜ்பவன்களை வைத்து தனியாக ஆட்சி நடத்துவதை தான் இந்த மத்திய அரசு நடத்தி வருகிறது. பாஜக அரசு எந்த விஷயத்திலும் மாநில அரசுகளை கலந்தாலோசிப்பதில்லை. பாஜக அரசு சி.பி.ஐ, அமலாக்கத்துறையை வைத்து மிரட்டுகிறார்கள்.
இந்த அரசிடம் எல்லாவற்றிற்குமே போராட வேண்டி இருக்கிறது. வேளாண் சட்டத்தில் ஒரு ஆண்டு தொடர்ந்து போராடி தான் வெற்றி பெற முடிந்தது. பாஜக வரலாற்றை மாற்ற முனைகிறது. நாங்கள் வரலாற்றை காப்பாற்ற நினைக்கிறோம். வரும் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், அதுதான் கடைசி பொதுத்தேர்தலாக இருக்கும்” இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
NEWS EDITOR : RP