நடிகர் ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ திரைப்படத்தை தயாரிப்பதற்காக மீடியா ஒன் எண்டர்டெயிண்மெண்ட் முரளி, ‘ஆட் பீரோ’ நிறுவனத்தை சேர்ந்த அபிர்சந்த் நஹாவரிடம் ரூ.6.2 கோடி கடன் பெற்றார். இதற்காக முரளி தாக்கல் செய்த ஆவணங்களுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்து கையெழுத்து இட்டிருந்தார். பின்னர் முரளி கடனாக பெற்ற பணத்தை அபிர்சந்த் நஹாருக்கு திரும்ப அளிக்காததால் முரளி, லதா ரஜினிகாந்த் மீது கடந்த 2015-ம் ஆண்டு அபிர்சந்த் நஹார் பெங்களூரு மாநகர 6-வது கூடுதல் முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். பெங்களூரு நீதிமன்றத்தில் 2015ம் ஆண்டு தொடர்ந்த இந்த வழக்கு கடந்த 8 ஆண்டுகளாக விசாரணையில் இருந்து வருகிறது.
புகாரின் அடிப்படையில் லதா ரஜினிகாந்த் மீது 196, 199, 420, 463 ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்ட போது தன் மீதான குற்றச்சாட்டுகளை ரத்து செய்யக் கோரி லதா ரஜினிகாந்த் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் மூன்று வழக்குகளை ரத்து செய்த நீதிமன்றம் 463 பிரிவில் உள்ள வழக்கை மட்டும் விசாரிக்க உத்தரவிட்டது. அந்த வழக்கையும் ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் மனு தாக்கல் செய்தார். அதன் மீதான விசாரணையில், லதா ரஜினிகாந்தின் விசாரணையை பெங்களூரு நீதிமன்றமே மேற்கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.