தேனி மாவட்டம் உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு மதுகுமாரி தலைமையிலான போலீசார் நேற்று உத்தமபாளையம் நகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது உத்தமபாளையத்தில், பழைய பைபாஸ் பஸ் நிறுத்தம் அருகில் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு கார் ஒன்று நின்று கொண்டிருந்தது.
காருக்குள் இருந்த 3 பேரிடம் போலீசார் விசாரித்ததில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காருக்குள் சோதனை செய்ததில் அதில் 3 பெட்டிகள் இருந்தன. அதில் ஒரு பெட்டியில் நாக்கு, இதயம், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தனித்தனியாக பேக்கிங் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் இருந்தன.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் உடனே காரில் வந்த நபர்களை உத்தமபாளையம் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு மற்ற 2 பெட்டிகளையும் போலீசார் திறந்து சோதனை செய்ததில் ஒரு பெட்டியில் துணிமணிகளும், மற்றொரு பெட்டியில் எலுமிச்சை, கற்பூரம், முட்டை உள்ளிட்டவையும் இருந்தன. இது குறித்து காரில் வந்த நபர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
பிடிபட்ட நபர்கள் மதுரை அய்யனார்கோட்டையை சேர்ந்த அலெக்ஸ்பாண்டி (39), ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த டேவிட் பிரதாப்சிங் (40), கமுதியை அடுத்த பசும்பொன்னை சேர்ந்த முருகன் (65) என தெரியவந்தது. இவர்களுக்கும் உத்தமபாளையம் பாறைமேடு தெருவை சேர்ந்த ஜேம்ஸ் (52) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
விசாரணையில் உடல் உறுப்புகளை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும் என பூஜை செய்வதற்காக உத்தமபாளையத்தை சேர்ந்த ஜேம்ஸ் என்பவர் கூறியதன் அடிப்படையில் கேரளாவில் இருந்து எடுத்து வந்ததாக மூவரும் தெரிவித்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியது. மூன்று பேரையும் கைது செய்து விசாரித்து வரும் நிலையில் இந்த உடல் உறுப்புகள் மனித உறுப்புகளா என்று தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பாரன்சிக் முறையில் பரிசோதனை செய்ததில் இந்த உறுப்புகள் மாட்டின் உறுப்புகள் என தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக கோபி மற்றும் உறுப்புகளுக்கு மாந்திரீக பூஜை செய்த பத்தனம்திட்டாவை சேர்ந்த செல்லப்பன் ஆகியோரை உத்தமபாளையம் போலீசார் விசாரணைக்காக அழைத்து வந்துள்ளனர். மேலும் இதன் பின்னணி குறித்து மாந்திரீகம் செய்த செல்லப்பாவிடம் தீவிர விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இதற்கு முன்பாக மனித உறுப்புகள் ஏதேனும் இது போல் பூஜை செய்து விற்கப்பட்டுள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஜேம்ஸ், பக்ருதீன் மற்றும் பாண்டி ஆகிய மூவரும் பணத்தை இரட்டிப்பு செய்வதாக கூறி 2லட்சம் ரூபாய் பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரியவந்ததை தொடர்ந்து அலெக்ஸ்பாண்டி உள்பட 3 பேர் அளித்த புகாரின் அடிப்படையில் தலைமறைவாக இருந்த ஜேம்ஸ், பக்ருதீன் மற்றும் பாண்டி ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் உத்தமபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அலெக்ஸ்பாண்டி உள்பட 3 பேரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில், ஜேம்ஸ் மீது ஏற்கனவே மாந்திரீகம் மூலம் பணத்தை இரட்டிப்பு செய்வதாக கூறி மோசடியில் ஈடுபட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. அந்த வகையில் அலெக்ஸ்பாண்டி உள்பட 3 பேரையும் ஜேம்ஸ் ஏமாற்றி மோசடி செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர்.
NEWS EDITOR : RP