ஈரானில் மீண்டும் ஹிஜாப் கெடுபிடி அமலாகியுள்ளது. இதனையடுத்து பெண்கள் தங்கள் முகம், தலையை முழுமையாக மறைக்கும்படி ஹிஜாப் அணிகிறார்களா என்பதைக் கண்காணிக்கும் சிறப்பு ரோந்துப் படையினர் தங்களின் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். கடந்த செப்டம்பர் மாதம் மாஷா அமினி மரணத்துக்குப் பின்னர் வெடித்த ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டங்கள் சற்றே தளர்ந்த நிலையில் தற்போது மீண்டும் ஹிஜாப் கெடுபிடி வேகமெடுத்துள்ளது.
ஈரானில் 9 வயது சிறுமி முதல் வயதான பெண்கள் வரை ஹிஜாப் அணிவது கட்டாயம். பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க ‘காஸ்த் எர்ஷாத்’ என்ற சிறப்புப் பிரிவு போலீஸார் பொது இடங்களில் ரோந்தில் ஈடுபடுவர். கடந்த செப்டம்பர் மாதம் 13-ம் தேதி ஈரானின் குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரை சேர்ந்த மாஷா அமினி (22) என்பவர் தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க குடும்பத்துடன் சென்றார். அப்போது சிறப்புப் படை போலீஸார், மாஷாவை வழிமறித்து அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம்சாட்டினர். அவரை கைது செய்து வேனில் அழைத்துச் சென்றனர். போலீஸ் காவலில் இருந்த அவர் கடந்த செப்டம்பர் 16-ம் தேதி உயிரிழந்தார். அதனைக் கண்டித்து ஈரானில் மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. அதனைக் கட்டுப்படுத்த சிறைத் தண்டனைகள், மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன.
2023 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் 354 பேருக்கு ஈரான் அரசு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளதாகவும், அதில் பெரும்பாலான தண்டனைகள் ஈரான் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதற்காக நிறைவேற்றப்பட்டவை என்றும் அண்மையில் ஒரு மனித உரிமைகள் சார் அமைப்பு அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில், “ஈரானில் ஞாயிற்றுக்கிழமை முதல் ஹிஜாப் கண்காணிப்பாளர்கள் ரோந்தை தீவிரப்படுத்தியுள்ளனர். பெண்கள் முறைப்படி ஹிஜாப் அணியாவிட்டால் அது சட்டத்துக்குப் புறம்பானது. சிறப்பு ரோந்துப் படையினர் ஹிஜாப் முறைப்படி அணியாத பெண்களை முறையாக அணியும்படி கண்டிப்பார்கள். விதிமுறையை மீறுவேன் என்று பிடிவாதம் செய்வோர் மீது வழக்குப் பதிவு செய்வார்கள். அதனால் சிறப்பு ரோந்துப் படையினர், அனைவரும் ஆடை ஒழுக்கத்தைப் பின்பற்றுமாறு அறிவுறுத்துகின்றனர். காவல்துறைக்கு இதைத் தாண்டியும் நிறைய விஷயங்களை செய்ய வேண்டியுள்ளதால் பெண்கள் ஒத்துழைக்க வேண்டும்” என்று ஈரான் சட்ட அமலாக்கத் துறை செய்தித் தொடர்பாளர் சயீது மோன்டாசெரல்மஹ்தி தெரிவித்துள்ளார்.
சிறப்புப் படையினருக்கான அதிகாரம் என்ன? இந்த சிறப்பு ரோந்துப் படையினர் ஹிஜாப் சரியாக அணியாத பெண்களை முறைப்படி அணியுமாறு கட்டளையிடுவார்கள். சில நேரங்களில் ஆண்களையும் ஆடை முறையை சுட்டிக்காட்டி உத்தரவிடுவார்கள். பெண்கள் இறுக்கமாக ஆடை அணிந்திருந்தால் அவர்களை உடனடியாக தளர்வான ஆடை அணியும்படி உத்தரவிட்டு வேறு ஆடை மாற்றச் செய்வார்கள். உத்தரவுகளுக்குக் கீழ்ப்படியாத பெண்களை கைது செய்வார்கள்.
NEWS EDITOR : RP