தீட்சிதர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிதம்பரம் நடராஜர் கோயில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்வதை தடுத்தது தொடர்பாக தீட்சிதர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு பக்தர்கள் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய அரசு அனுமதி வழங்கி இருந்து. இந்த அரசு உத்தரவை மீறி கனசபை மீது பக்தர்களை ஏற விடாமல் தீட்சிதர்கள் தடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் அரசு உத்தரவை மீறிய கோயில் தீட்சிதர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி சிதம்பரம் தில்லையம்மன் கோயில் செயல் அலுவலர் சரண்யா, சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் பொது ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பட்டு தீட்சிதர் உள்ளிட்ட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தீட்சிதர்கள் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு விசாரணை நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு நடைபெற்றது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான அரசு குற்றவியல் வழக்கறிஞர் கோபி, வழக்கின் விசாரணை நிலுவையில் உள்ளதாகவும், வழக்கை ரத்து செய்யக்கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த வாதங்களை கேட்ட நீதிபதி வழக்கை ரத்து செய்ய மறுத்து தீட்சிதர்கள் வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
