நள்ளிரவு முதல் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய மைசூரு, திருப்பதி உள்ளிட்ட 7 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆவடி மற்றும் திருவள்ளூரில் இருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்றி காரணமாக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனிடையே சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது. கனமழை தொடர்ந்து பெய்துவருவதால், ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். விமானசேவை பாதிக்கப்பட்டு 10க்கும் மேற்பட்ட விமானங்கள் பெங்களூருவுக்கு திரும்பி அனுப்பப்பட்டன. பல விமானங்கள் 6 மணி நேரம் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கனமழை காரணமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முக்கிய இருப்பு பாதைகளில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் வியாசர்பாடி- பேசின் ப்ரிட்ஜ் பாலம் எண் 14-ல் ரயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது. இதை அடுத்து சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் 7 ரயில்கள் ஆவடி மற்றும் திருவள்ளூரில் இருந்து புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்திருக்கிறது.
அதன்படி சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய மைசூரு விரைவு ரயில் ஆவடியில் இருந்து புறப்படும் என்றும், சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய திருப்பதி விரைவு ரயில் திருவள்ளூரில் இருந்து புறப்படும் என்றும், கோவை செல்லக்கூடிய வந்தே பாரத் ரயில் சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் புறப்படும் என்றும், கோவை இன்டர்சிட்டி விரைவு ரயில் மற்றும் பெங்களூரு செல்லும் லால் பாத் சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் ஆவடியில் இருந்து புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரயில்வே தண்டவாளங்களில் வெள்ள நீரை வடிய வைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், வெள்ள நீரை முழுமையாக வெளியேற்றிய பிறகே சென்ட்ரலில் இருந்து ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதனால பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
NEWS EDITOR : RP