சேலத்தில் முதன் முறையாக ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி..!! இளைஞர்கள், இளம்பெண்கள் கலந்து கொண்டு ஆடல், பாடலுக்கு உற்சாக நடனம்..!!

Spread the love

தமிழகத்தில் சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் ஞாயிற்றுக்கிழமையில் ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில், ஏராளமான இளைஞர்கள், இளம்பெண்கள் கலந்து கொண்டு நடனமாடி மகிழ்ந்தனர்.வாரம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைக்கு செல்லும் இளைஞர்கள், இளம்பெண்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபடும் வகையில் இந்த ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருவதால் அனைவரின் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.

இந்நிலையில், சேலம் மாநகரில் நேற்று முதன் முறையாக ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதற்காக அஸ்தம்பட்டி ரவுண்டானாவில் இருந்து சாரதா கல்லூரி செல்லும் சாலையில் மேடை அமைக்கப்பட்டு இருந்தது. போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடந்த இந்த நிகழ்ச்சியை மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் போலீஸ் துணை கமிஷனர் சந்திரமவுலி கலந்து கொண்டு பேசினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அதிகாலை முதலே அந்த பகுதிக்கு இளைஞர்கள், இளம்பெண்கள் திரண்டனர். மேலும், சிறுவர், சிறுமிகளை அவர்களது பெற்றோர்கள் அழைத்து வந்திருந்தனர். தொடர்ந்து ஆடல், பாடலுடன் ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி தொடங்கியது. சிறுவர், சிறுமிகளின் நடனம், சிலம்பம், இசைக்கு ஏற்ப உடற்பயிற்சி, மிமிக்கிரி, மல்லர் கம்பம் உள்ளிட்ட வீரசாகசங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

மேலும், துள்ளலான சினிமா பாடல் இசைக்கப்பட்டது. அதற்கு சாலையில் திரண்டிருந்த பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், இளைஞர்கள், இளம்பெண்கள் உற்சாக நடனமாடினர். இதுதவிர, குழந்தைகள் முதல் வயதான பெரியவர்களும் இசைக்கு ஏற்ப நடனம் ஆடியதை காணமுடிந்தது. காலை 6 மணி முதல் 9 மணி வரை சுமார் 3 மணி நேரம் நடந்த இந்த ஆட்டம், பாட்டம் கொண்டாட்டத்தால் அந்த பகுதியே திருவிழா போல் கூட்டம் காணப்பட்டது. இதனால் அஸ்தம்பட்டி ரவுண்டானா பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சாரதா கல்லூரி சாலை வழியாக செல்ல வேண்டிய வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. 3 பிரிவுகளின் கீழ் வழக்கு இதற்கிடையே இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்து இருந்தவர் மீது, பலர் ஒன்று கூடுதல், சட்டத்திற்கு புறம்பாக மக்களை அடைத்து வைத்தல், பாதுகாப்பு இல்லாமல் மின்சாதன பொருட்களை பயன்படுத்தி அச்சுறுத்துதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒலிபெருக்கி வயரில் திடீர் மின்கசிவு நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போது, மேடை அருகில் வைக்கப்பட்டு இருந்த ஒலிபெருக்கிகளுக்கு பயன்படுத்திய மின்வயரில் திடீரென கரும்புகை வெளியேறியது. இதனால் நிகழ்ச்சி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. அதன்பிறகு உடனடியாக அந்த வயர்கள் சரி செய்யப்பட்டதை தொடர்ந்து மீண்டும் நிகழ்ச்சி தொடங்கியது. இதுபோன்ற பொழுது போக்கு நிகழ்ச்சிக்கு பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் நடத்த அனுமதி வழங்கக்கூடாது. சூரமங்கலம் உழவர் சந்தை அருகில், அழகாபுரம் போலீஸ் நிலையம் அருகில் உள்ளிட்ட மேம்பாலங்கள் அமைந்துள்ள இடத்தில் நடத்தினால் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

NEWS EDITOR : RP

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram