உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. இந்த மசூதி வளாகத்தின் சுவரில் சிங்கார கவுரி அம்மன் சிலை இருப்பதாகவும் அதை தினமும் வழிபட அனுமதிக்கும்படியும் கோரி 5 பெண்கள் சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இதையடுத்து, ஞானவாபி மசூதியில் வீடியோ ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து அஞ்சுமன் இன்டெஜமியா மஸ்ஜித் கமிட்டி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், வாரணாசி மாவட்ட நீதிமன்றமே வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக தீர்ப்பிடப்படாமல் நிலுவையில் உள்ள இந்த வழக்கிகிற்கு சம்மந்தப்பட்ட அந்த ஐந்து பெண் மனுதாரர்களில் ஒருவரான ராக்கி சிங் என்பவர் தன்னை கருணைக் கொலை செய்துவிடுமாறு கோரி இன்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த வழக்கில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்த சில நாட்களிலேயே அவர் இவ்வாறு குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள அந்த கடிதத்தில், நாளை காலை 9 மணி வரை குடியரசுத் தலைவரின் பதிலுக்கு காத்திருக்கப் போவதாகவும் அதன் பிறகு தனது சொந்த முடிவை செயல்படுத்தப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். சக மனுதாரர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரின் துன்புறுத்தல் காரணமாக வழக்கில் இருந்து விலகிக் கொள்ளும் முடிவை எடுத்ததாக ராக்கி சிங் தனது கடித்ததில் கூறியுள்ளார்.
NEWS EDITOR : RP