சென்னை கே.கே நகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஐடி ஊழியர் மோகன்நாத். தீவிர சாய்பாபா பக்தரான இவர் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற சாய்பாபா பஜனை நிகழ்ச்சியில் பாண்டிச்சேரியை சேர்ந்த சபரி நாதன் என்பவர் சந்தித்து பழக்கம் ஏற்பட்டது. சாய்பாபா பற்றிய பல கதைகளை மோகன் நாத்திற்கு சபரி நாதன் கூறியதால் அவரை நம்பி நண்பர்களாக பழகி வந்தார். தனக்கு ஜோசியம் தெரியும் என்றும், தனக்கு செய்வினைகள் எடுக்க தெரியும் என்றும் கூறி நம்ப வைத்தார்.
இந்நிலையில், தனது இரண்டு சகோதரர்கள் தனக்கு சூனியம் வைத்திருப்பதால் நல்ல காரியங்கள் பல தடைப்பட்டு வருவதாகவும், இதனால் பரிகாரம் செய்ய வேண்டும் என மோகன் நாத், சபரி நாதனிடம் கூறியதாக தெரிகிறது. இதனை பயன்படுத்தி சபரி நாதன் அவரை மூளைச்சலவை செய்து அவசர தேவைக்காக சுமார் 3 முறை தவணை முறையில் 2.5 லட்சம் ரூபாய் பெற்றார்.
இந்த நிலையில் கடந்த மேமாதம் செய்வினையை நீக்க மேலும் சில பரிகார பூஜை செய்ய வேண்டும் எனவும், சீரடிக்கு நேரடியாக சென்று நகையை வைத்து அதை தடவி சூனியத்தை நீக்க வேண்டும் என்று தெரிவித்து, மோகன்நாத்திடம் இருந்து 15 சவரன் நகைகளை சபரிநாதன் பெற்று கொண்டார். பல நாட்களாகியும் சபரி நாதன் திரும்ப வராததால் சந்தேகமடைந்த மோகன் நாத், சபரி நாதனுக்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் ஆகி இருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மோகன்நாத் மே மாதம் 12ஆம் தேதி கே.கே நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் போலீசார் மோசடி உள்ளிட்ட இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த சபரி நாதனை தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் சபரி நாதனின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தும் போது, சூளைமேட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்ததையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் சபரிநாதனின் சீடராக இருந்த ராதா என்பவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.சபரிநாதன் மோசடி வழக்கில் கைதாகி புதுச்சேரி சிறையில் இருந்த போது, ராதாவை சந்தித்தார். விருதுநகரைச் சேர்ந்த ராதா வேறொரு வழக்கில் கைதாகி புதுச்சேரி சிறையில் இருந்தார். இருவரும் ஜாமீனில் வெளிவந்து ஒன்றாக சென்னை வந்து, கே.கே.நகரில் தங்கி, தங்களது மோசடியை அரங்கேற்றி இருந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.ஒவ்வொரு வழக்கிலும் ஜாமீனில் வெளிவந்த சபரிநாதன் அடுத்தடுத்து அவதாரங்கள் எடுத்து பல்வேறு விதமான முறையில் மோசடிகளை அரங்கேற்றியுள்ளது தெரியவந்துள்ளது. “தன்னிடம் பத்து நிமிடம் பேசினால், ஈசியாக நம்ப வைத்து ஏமாற்றி விடுவேன்” என்று கைதான சபரி நாதன் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
NEWS EDITOR : RP