இஎஸ்இடி அறிக்கையின்படி, கடந்த ஓராண்டு முழுவதும் கூகுள் பிளே ஸ்டோரில் இருந்த இந்த 18 செயலிகளும், அவற்றின் வாடிக்கையாளர்களை உளவுபார்த்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த செயலிகளை பயன்படுத்துவோரின் செல்போனில் இருக்கும் ஏராளமான தகவல்களை இந்த செயலிகளை பயன்படுத்தி அந்நிறுவனம் திருடியிருப்பதும் கண்டறியப்பட்டது.
இந்த செயலிகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு கடன் அளித்து, அவர்களின் தகவல்களை திருடி, அதன் மூலம் கடன் பெறுவோரிடமிருந்து அதிக வட்டிக் கேட்டு மிரட்டுவதும், அவர்களின் புகைப்படங்களை, வாடிக்கையாளர்களின் செல்ஃபோனிலிருக்கும் தொலைபேசி எண்களுக்கு அனுப்புவோம் என்பது போன்ற மிரட்டல்களை விடுத்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆய்வின்படி, கடன் கொடுக்கும் செயலிகளாக அறிமுகமாகி, மிரட்டல் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இது பெரும்பாலும், ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா, தென்கிழக்கு ஆசிய நாட்டு மக்களை குறிவைத்தே இயக்கப்படுகின்றன எனவும் ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது. இந்த வரிசையில் ஏஏ கிரெடிட், அமோர் கேஷ், ஈஸி கிரெடிட், காஷ்வாவ், கிரெடிபஸ், பிளாஷ்லோன், கோ கிரெடிடோ, பின்னப் லென்டிங், 4எஸ் கேஷ், ட்ரூநய்ரா, ஈஸி கேஷ் உள்ளிட்ட செயலிகளும் அடங்கும்.இதில் 17 செயலிகள் முற்றிலும் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்டுவிட்டன. ஒன்று மட்டும் புதிய அப்டேட்டுகளுடன் இந்த உளவு பார்க்கும் வசதி இல்லாமல் வந்துள்ளதால் கூகுள் பிளே ஸ்டோரில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.