இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர் எதிரொலியாக, தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.680 அதிகரித்து ரூ.42,960-க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி வருகிறது.
தங்கம் விலை கடந்த ஜுன் மாதம் 4-ம் தேதி பவுனுக்கு ரூ.46 ஆயிரம் என உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்தது. பின்னர், தங்கம் விலை படிப்படியாக குறைந்தது. இம்மாதம் 6-ம் தேதி தங்கம் விலை பவுன் ரூ.42,280-க்கு விற்பனையானது. தங்கம் விலை குறையத் தொடங்கியதைக் கண்டு நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், அவர்களது மகிழ்ச்சி ஓரிரு நாட்கள் கூட நீடிக்கவில்லை.
காரணம், இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக, தங்கம் விலை நேற்று அதிகரித்தது. இதன்படி, தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.85 அதிகரித்து ரூ.5,370-க்கும், பவுனுக்கு ரூ.680 அதிகரித்து ரூ.42,960-க்கும் விற்பனையானது.
இதுகுறித்து, நகை வியாபாரிகள் சங்க நிர்வாகிகளிடம் கேட்டபோது, ‘‘தொடர்ந்து அதிகரித்து வந்த தங்கம் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்தது. இந்நிலையில், இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக, தங்கத்தின் விலை திடீரென ஏறத் தொடங்கி உள்ளது. வரும் நாட்களில் போரின் போக்கை வைத்துதான் தங்கம் விலை உயர்வைக் கணிக்க முடியும்’’ என்றனர்.
NEWS EDITOR : RP