தாராபுரத்தில் பட்டபகலில் தங்க நகை கடைக்குள் நுழைந்த 3 பெண்கள் தங்க நகை வளையல்கள் வாங்குவது போல் நடித்து தலா 6 கிராம் எடைகொண்ட 2 தங்க வளையல்களை திருடி சென்றனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த தயா. இவர் தாராபுரம்-பொள்ளாச்சி சாலையில் தயா கோல்டு என்ற பெயரில் தங்க நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணிக்கு சாப்பிடுவதற்கு வீட்டிற்கு தயா சென்றுள்ளார். அப்போது கடையில் ஒரு பெண் மட்டும் இருந்ததாக கூறப்படுகிறது.
அப்போது நகைக்கடைககு 3 பெண்கள் வந்துள்ளனர். அவர்கள் டாலர் வாங்குவதாக கூறி கடையில் இருந்த நகைகளை பார்க்க வேண்டும் என்று கடையில் இருந்த பெண்ணிடம் கூறினர். இதையடுத்து கடையில் இருந்த பெண் வளையல்கள் வைத்திருந்த தட்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து காட்டியுள்ளார். அப்போது அவர்களில் ஒரு பெண் கடையில் இருந்து வெளியேறினார். மற்ற இரண்டு பெண்கள் எங்களுக்கு எந்த மாடல் வளையல்களும் பிடிக்கவில்லை என கூறிவிட்டு சிறிது நேரத்திற்கு பிறகு அவர்களும் நைசாக வெளியேறினர். அப்போது கடையில் இருந்த பெண் வளையல்களை சரிபார்த்தபோது 6 கிராம் எடை கொண்ட இரண்டு வளையல்கள் திருட்டுப் போனது தெரியவந்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கடையில் வேலை பார்க்கும் பெண் நடந்ததை உரிமையாளர் தயாவிடம் கூறியுள்ளார். உடனே அவர் தாராபுரம் குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்புசாமி சம்பவம் நடந்த கடைக்கு வந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது கடைக்குள் 3 பெண்கள் வருவதும், அவர்கள் தங்க வளையல்கள் டிசைன்களை பார்வையிட்டபோது அவர்களில் ஒரு பெண் இரண்டு வளையல்களை திருடி கையில் போடும் காட்சி பதிவாகி உள்ளது.
NEWS EDITOR : RP