மேற்கிந்தியத் தீவுகள் அணியின் விக்கெட் கீப்பர் ஜோஷ்வா டி சில்வாவின் தாயை சந்தித்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி. அந்த சந்திப்பின் போது பரஸ்பரம் இருவரும் அணைத்து தங்கள் உணர்வை வெளிப்படுத்தி இருந்தனர்.
கிரிக்கெட் உலகில் மகத்தான வீரர்களில் ஒருவராக அறியப்படுகிறார் விராட் கோலி. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என சர்வதேச அரங்கில் ரன் வேட்டை ஆடி வருகிறார். அதன் காரணமாக அவருக்கு ரசிகர்கள் ஏராளம். அது இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் விரிந்துள்ளது. அந்த ரசிகர்களில் ஒருவர் தான் ஜோஷ்வாவின் அன்னை. இந்நிலையில், அவரை சந்தித்துள்ளார் கோலி. அது குறித்து பார்ப்போம்.
2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இந்திய அணிகள் விளையாடி வருகின்றன. இந்த போட்டியின் முதல் நாளன்று விராட் கோலி பேட் செய்த போது மேற்கிந்திய தீவுகள் அணியின் விக்கெட் கீப்பர் ஜோஷ்வா டி சில்வா, ‘எனது அன்னை உங்களின் ரசிகர்’ என கோலி உடனான உரையாடலில் தெரிவித்திருந்தார். அது ஸ்டம்ப் மைக்கில் பதிவாகி இருந்தது. அதோடு அது வைரலும் ஆனது.
“என் அன்னை என்னை போனில் அழைத்திருந்தார். அப்போது கோலியை பார்க்க வருவதாகவும், என்னை பார்க்க வரவில்லை என்றும் சொல்லி இருந்தார். அதை என்னால் நம்ப முடியவில்லை. அவர் தற்போது போட்டியை பார்த்துக் கொண்டுள்ளார்” என ஜோஷ்வா அப்போது சொல்லி இருந்தார்.
இந்நிலையில், சனிக்கிழமை அன்று காலை ஜோஷ்வாவின் தாயை கோலி சந்தித்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது ஜோஷ்வாவின் அன்னை, கோலியை அணைத்து, முத்தம் கொடுத்தார். தொடர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
NEWS EDITOR : RP