பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற செர்பிய வீரர் நோவக் ஜோகோவிச் அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி கடந்த இரு வாரங்களாக பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் நடைபெற்று வந்தது. ஆண்கள் ஒற்றையர் இறுதி போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் சாம்பியனும், தரவரிசையில் 3ஆம் இடம் வகிக்கும் செர்பிய நாட்டை சேர்ந்த நோவக் ஜோகோவிச், நான்காம் நிலை வீரரும் நார்வேயை சேர்ந்த கேஸ்பர் ரூட்டை எதிர்கொண்டார்.
ஜோகோவிச்சின் ஆட்டத்தில் ஆரம்பத்தில் சற்று தடுமாற்றம் தெரிந்தது. பின்னர் அவர் சுதாரித்து விளையாட தொடங்கினார். சுமார் 3 மணி நேரம் 13 நிமிடங்கள் நீடித்த ஆட்டத்தில் 7-6 (7-1), 6-3, 7-5 என்ற நேர் செட்டில் கேஸ்பர் ரூட்டை அவர் வீழ்த்தினார். இதன் மூலம் மூன்றாவது முறையாக ஜோகோவிச் பட்டம் வென்றுள்ளார்.
இதுவரை 22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் சாதனையை முறியடித்து, அதிக கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இது ஜோகோவிச்சின் 23 வது கிராண்ட் ஸ்லாம் பட்டம் ஆகும். மேலும் செரீனா வில்லியம்ஸ் கிராண்ட் ஸ்லாம் சாதனையையும் ஜோகோவிச் சமன் செய்துள்ளார்.
பட்டம் வென்ற ஜோகோவிச்சிற்கு ரூ. 20.5 கோடி பரிசாக வழங்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் உலக தரவரிசை பட்டியலில் அவர் முதல் இடத்திற்கு முன்னேறுகிறார். தோல்வியடைந்த கேஸ்பர் ரூட்டுக்கு ரூ.10 கோடி பரிசாக கிடைத்தது.
பட்டம் சென்ற நோவக் ஜோகோவிச்சிற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து தெரிவித்துள்ளார். செர்பிய மக்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்கிறேன். இளைஞர்களுக்கு எழுச்சியூட்டும் சின்னமாக திகழும் ஜோகோவிச் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துகிறேன் என குடியரசு தலைவர் கூறியுள்ளார்.
NEWS EDITOR : RP