மார்பக புற்றுநோயை கண்டறிய அக்டோபர் 12, 13-ம் தேதிகளில் இலவச பரிசோதனை முகாம் நடைபெற உள்ளதாக கோவை அரசு மருத்துவமனையின் டீன் டாக்டர் நிர்மலா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “நம் நாட்டில் தற்போது மார்பக புற்றுநோய் அதிகளவில் பெண்களை பாதிக்கிறது. இதனை தொடக்க நிலையிலேயே கண்டறிந்தால் முற்றிலும் குணப்படுத்தலாம். கோவை அரசு மருத்துவமனையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 500-க்கும் மேற்பட்ட மார்பக புற்றுநோயாளிகள் கண்டறியப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். புற்றுநோய் அறிகுறி உள்ள பெண்கள், அதைப்பற்றிய புரிதல் இல்லாததாலும், தேவையற்ற பயம் காரணமாகவும் மருத்துவரின் உதவியை நாடுவதில்லை.எனவே, இந்த அறிகுறிகள் உள்ள பெண்கள் முகாமில் கலந்துகொண்டு, மருத்துவர் மூலம் இலவசமாக பரிசோதனை செய்துகொள்ளலாம். தேவைப்படின் மேமோகிராம் பரிசோதனை மற்றும் இதர ஸ்கேன் பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்படும். முகாமில் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, மார்பக புற்றுநோய் கண்டறியும் முகாம் வரும் அக்டோபர் 12, 13-ம் தேதிகளில் மருத்துவமனையின் புதிய கருத்தரங்க கூடத்தில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. மார்பகத்தில் வலியுடனோ அல்லது வலியில்லாத கட்டி, மார்பகம் வீங்குதல், தடித்திருத்தல், மார்பக தோலில் மாற்றங்கள், தோல் சிவந்திருத்தல், மார்பக காம்புகள் திடீரென உள்நோக்கி செல்லுதல், காம்புகளில் ரத்தம் அல்லது நீர் போன்ற திரவம் வடிதல், அக்குலில் நெறிக்கட்டிகள் ஏற்படுதல் போன்றவை மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் ஆகும்.
NEWS EDITOR : RP