ஜெருசலேம், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவ வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பு ஆட்சி செய்கிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. ஹமாஸ் அமைப்பை போன்று மேலும் சில ஆயுதமேந்திய குழுக்கள் காசா முனை, மேற்குகரையில் செயல்பட்டு வருகின்றன. அதேவேளை பாலஸ்தீனத்திற்கு மேற்கு கரையில் முகமது அப்பாஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.
மேற்குகரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களுக்கும் இடையே அவ்வப்போது மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
இதனிடையே, இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்குகரையின் ஜெனின் அகதிகள் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அந்த பகுதிக்கு கடந்த திங்கட்கிழமை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் சென்றனர்.
அப்போது அங்கு பதுங்கி இருந்து ஆயுதக்குழுவினர் இஸ்ரேலிய படையினர் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் இரு தரப்பிற்கும் இடையே பயங்கர துப்பாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த மோதலின் போது 6 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர்.
இதனை தொடர்ந்து ஜெனின் அகதி முகாமில் இருந்து இஸ்ரேலிய படையினர் செல்ல முயற்சித்தபோது பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் குண்டு வீச்சு தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து, இஸ்ரேலிய விமானப்படையில் இருந்து அபாசி ஹெலிகாப்டர் மூலம் பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பின்னர், ஜெனின் அகதிகள் முகாம் பகுதியில் இருந்து இஸ்ரேலிய படையினர் மீட்கப்பட்டனர். இந்த குண்டு வீச்சு தாக்குதல் சம்பவத்தில் இஸ்ரேலிய படையினர் சிலர் காயமடைந்தனர். இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 6 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்த நிலையில் இதற்கு பதிலடியாக பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த வகையில், இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள மேற்குகரையின் இலி பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் மற்றும் அருகில் இருந்த உணவகத்திற்கு காரில் வந்த முகமது ஷாகித் (26), கலித் முஷ்தபா ஷாப் (24) என்ற 2 பாலஸ்தீனிய இளைஞர்கள் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு அங்கிருந்த இஸ்ரேலியர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 4 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். மேலும், 4 இஸ்ரேலியர்கள் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலையடுத்து அங்கு இருந்த இஸ்ரேலியர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் தாக்குதல் நடத்திய பாலஸ்தீனிய இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் தாக்குதலில் ஈடுபட்ட ஒரு பாலஸ்தீனிய இளைஞன் சுட்டுக்கொல்லப்பட்டான். எஞ்சிய பாலஸ்தீனிய இளைஞன் தப்பியோடிய நிலையில் நப்லஸ் நகர் அருகே அந்த இளைஞனையும் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே மீண்டும் மோதல் போக்கு அதிகரித்துள்ளதால் மத்திய கிழக்கு பகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
NEWS EDITOR : RP